ஒரு நாடு ஒரு சட்டம் என்பதில் ஜனாதிபதி எதனை வலியுறுத்த விரும்புகிறார் – ரவூப் ஹக்கீம் கேள்வி

19 ஆவது திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து ஜனாதிபதியும் அரசாங்கமும் வெளிப்படுத்திவரும் கருத்துக்களில் தெளிவுத்தன்மையில்லை. ஒரு நாடு ஒரு சட்டம் என்பதில் ஜனாதிபதி எதனை வலியுறுத்துகின்றார் என்பது தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  வெள்ளிக்கிழமை  ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

மக்களுக்கு வாக்குறுதியளித்தப்படி சுபீட்சமான நாட்டையே உருவாக்க வேண்டும். ஆனால், 19 ஆவது திருத்தச்சட்டத்தை அகற்ற விரும்புகின்றனர். புதிய அரசியலமைப்பையும் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறுகின்றனர். 19இல் உள்ள நல்ல விடயங்களையும் அகற்ற விருப்கின்றனரா?. அல்லது அரசாங்கம் அவர்களுக்கு தவறானது என கருதும் விடயங்களை அகற்ற முற்படுகின்றனரா என தெளிவில்லாதுள்ளது. இதற்கு ஒரு வரைபை முன்வைக்குமானால் அதனை  தெளிவாக விளங்கிக்கொள்ள கூடியதாக இருக்கும்.

ஒரு சமுதாயத்தின் மீது அச்சுறுத்தலை ஏற்படுத்தி அவர்களை வைத்து ஒரு பூச்சாண்டி காட்டப்பட்டது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். அதேபோன்று அதற்கு உதவியவர்களை சட்டத்தின் முன் கொண்டுவாருங்கள். மாறாக ஒரு சமுதாயத்தின்மீது இன வெறுப்பை தூண்டும் பறையை அடிக்கக் கூடாது. இதனை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நாமும் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவத்தில் நீதியற்ற வகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளளோம். இந்த நாட்டில் ஜனநாயகத்துக்காக குரல்கொடுத்தவர்களே நாம்.

மேலும் ஒரு நாடு ஒரு சட்டம் என்பதில் ஜனாதிபதி எதனை வலியுறுத்த விரும்புகிறார். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளை, ஏனைய மதங்களுக்கு சமவுரிமை அளிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறுகிறார்.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு

எமது நாடு  பல்வகைத்தன்மை கொண்ட நாடு. பல இன, மொழிகள் உள்ளன. இவர்களுக்கென தனியான திருமணச் சட்டங்கள் மற்றும்  சொந்த விவகாரங்களை  பார்த்துக்கொள்ள நாம் வாய்ப்பளித்துள்ளோம். அவ்வாறான பல்வகைமையினை அகற்ற வேண்டும் என்பது ஆபத்தானது. அது சமச்சீரற்ற தன்மையை ஏற்படுத்தும். அனர்த்தமிகு நிலைக்கு கொண்டுசெல்லும். அவ்வாறான நிலை ஏற்படக் கூடாதென எதிர்பார்க்கிறோம் என்றார்.

SOURCEவீரகேசரி பத்திரிகை