நான் டி.ஐ.ஜி.யின் மகள். என்னை நிறுத்த நீ யார் ?

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மகள் செலுத்திய காரை நிறுத்தியமைக்காக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொட்டாவ பொலிஸ் நுழைவாயிலில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மகள் செலுத்திச் சென்ற காரை, போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் நிறுத்தியமைக்காக, கொட்டாவ பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் அந்த பொலிஸ் நிலையத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

கடந்த ஜூலை 15 ஆம் திகதி இரவு, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்யும் விசேட சுற்றிவளைப்பு மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றிவளைப்பில் குறித்த உப பொலிஸ் பரிசோதகரும் பங்கேற்றுள்ள நிலையில் அன்றைய தினம் இரவு, இரட்டை கோட்டை  ஊடறுத்து வாகனம் செலுத்தியமைக்காக கார் ஒன்றை குறித்த உப பொலிஸ் பரிசோதகர் நிறுத்தியுள்ளார்.

பின்னர் காருக்கு அருகே சென்றபோது, காரிலிருந்த பெண் காருக்குள் உள்ள மின் விளக்கை அணைத்துள்ளார்.

Read:  மீண்டும் ரணில் !!

இதன்போது, அப்பெண்ணின் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை குறித்த உப பொலிஸ் பரிசோதகர் கோரியபோது, ‘ நான் டி.ஐ.ஜி.யின் மகள். என்னை நிறுத்த நீ யார்’ என கடும் தொனியில் கேட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுள்ளார்.

இது தொடர்பில் குறித்த உப பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் பதிவுப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

மறு நாள், பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் அலுவலகத்துக்கு குறித்த உப பொலிஸ் பரிசோதகர் அழைக்கப்ப்ட்டுள்ளார். அங்கு ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபரும் அவரது மகளும் இருந்துள்ளனர், அவர்கள் முன்னிலையில் பிரதேசத்தின் உயர் அதிகாரி உப பொலிஸ் பரிசோதகரை மிகக் கேவலமாக ஏசியதாக, அந்த உப பொலிஸ் பரிசோதகர் தனது சகோதர அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

அந்த உப பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் பதிவுப் புத்தகத்தில் இட்ட பூரணமான பதிவைக் கண்டுகொள்ளாத உயர் அதிகாரி, ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூறியதனை மட்டும் கேட்டு செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படியே கடந்த ஜூலை 16 ஆம் திகதி முதல் அந்த உப பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் நுழைவாயிலில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு கடந்த பொதுத் தேர்தலில் வாக்களிக்கச் செல்லவும் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான பின்னணியிலேயே இது குறித்து விசாரிக்க பதில் பொலிஸ் மா அதிபர்,மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

Read:  மீண்டும் ரணில் !!
VIAMada
SOURCEஎம்.எப்.எம்.பஸீர்