முஸ்லிம்களின் பூர்வீக காணிகள் சிங்களவர்களால் ஆக்கிரமிப்பு!

அம்பாறை – சம்மாந்துறை பிரதேச எல்லையில் அமைந்துள்ள வளத்தாப்பிட்டியில் உள்ள முஸ்லிங்களின் பூர்வீகக் காணியான கரங்க வட்டை தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 1943 ஆம் ஆண்டியிலிருந்து இந்தக் காணியில் முஸ்லிம்கள் விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருந்தனர். இப்போது இந்த வயலில் முஸ்லிங்கள் கால் வைக்கமுடியாத நிலை உருவாகியுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கரங்கவட்டையில் வைத்து ஊடகங்களை சந்தித்த விவசாயிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த விவசாயிகள் 2013 ஆம் ஆண்டு அம்பாறையில் நடைபெற்ற தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் பின்னர் அந்தக் காணிகள் முஸ்லிம்களிடமிருந்து கைநழுவச் செய்யப்பட்டன. தற்போது அந்தக் காணிக்குள் அத்துமீறி சிங்கள மக்கள், வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். அடாத்தாக தொடர்ச்சியாக இந்தக் காணியில் சிங்கள மக்கள் விதைப்புக்கான உழவு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். எங்களின் காணி என்பதற்கான முழு ஆதாரமும், உறுதிப் பத்திரங்களும், வரைபடங்களும் எங்களிடம் உள்ளது. இந்த விவகாரம் தீர்க்கப்படாமல் நீடித்தால் இனக்கலவரம் உருவாகும் வாய்ப்பும் உள்ளது.

இது தொடர்பில் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும், அவர்கள் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இந்தப் பாரதூரமான விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் எவரும் உரிய முறையில் கவனத்தைச் செலுத்தாமையே தங்களது காணிகள் பறிபோவதற்கான பிரதான காரணம்.

எங்களின் காணிக்குள் நாங்கள் சென்று வேளாண்மைக்கு தயாராகும் சந்தர்ப்பங்களில் சிங்கள மக்கள் மண்வெட்டி, கத்தி, கம்பிகளைக் கொண்டு தாக்க வருகிறார்கள். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், விவசபாய அமைச்சர், பொலிஸ் உயரதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர்.

மாளிகைக்காடு நிருபர் – தினக்குரல் 24/9/21

Read:  அரிசி மாஃபியாவுக்கான அரசாங்கத்தின் பதில்