தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்கள் மத்தியிலும் புதிய பிறழ்வுகள் தோற்றம் பெறும் –  நதீக ஜானகே

தடுப்பூசி வழங்கலின் மூலம் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட சனத்தொகைக்கு மத்தியில் வைரஸ் பரவலுக்கு இடமளிக்கப்பட்டால் புதிய பிறழ்வுகள் தோற்றம் பெறக் கூடும் என்பதோடு , அது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமையும்.  எனவே இது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்று இரசாயன ஆய்வு கூடத்தின் வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீக ஜானகே தெரிவித்தார்.

எனவே அல்பா மற்றும் டெல்டாவைப் போன்று பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய வைரஸ் பிறழ்வுகள் தோற்றம் பெறுமா என்பது தொடர்பில் கொழும்பு – இரசாயன ஆய்வு கூடதம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் இணைந்து தொடர்ச்சியான ஆய்வுகளை முன்னெடுத்து வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் நதீக ஜானகே தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இலங்கையில் தற்போது வழங்கப்படுகின்ற சகல தடுப்பூசிகளும் டெல்டா பிறழ்விற்கு எதிராக செயற்படக் கூடியவையாகும்.

எனினும் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகக் காணப்படுபவர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியை வழங்குவதன் மூலம் டெல்டாவிடமிருந்து உச்சபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

கொவிட் தொற்று அறிகுறிகள் தென்படும் போது அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுத்து அதில் தொற்று ஏற்படவில்லை என்ற முடிவு கிடைக்கப் பெற்றால், அதனை உறுதி செய்து கொள்வதற்காக பி.சி.ஆர். பரிசோதனையையும் எடுப்பது அத்தியாவசியமானதாகும் என்றார்.

(எம்.மனோசித்ரா) -வீரகேசரி-