ஐ.தே.க.வினரால் எனக்கு கொலை அச்சுறுத்தல் – வடிவேல் சுரேஷ்

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்திற்குள் கதவை உடைத்துக் கொண்டு உட்புகுந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் எம்.பி.க்கள் சிலர் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தாக சங்கத்தின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் பாராளுமன்றத்தில் முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினையால் முன்னாள் பிரதமரும் ஐ.தே.க.எம்.பி.யுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடிவேல் சுரேஷுக்குமிடையில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.

பாராளுமன்ற நேற்று புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய வடிவேல் சுரேஷ் எம்.பி, கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்திற்குள் கடந்த 8ஆம் திகதி பலவந்தமாக நுழைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் எம்.பி.க்களான சாகல ரட்னாயக்க, நவீன் திஸாநாயக்க மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோர் தலைமையிலான குழு சங்கத்தின் காரியாலயத்தில் அடாவடியில் ஈடுபட்டது. அமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய அதிகாரிகளும் இந்தக் குழுவில் இருந்தனர். இவர்கள் கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளை வைத்திருந்தனர்.

அலுவலகத்தின் கதவை உடைத்தே இவர்கள் உட்புகுந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத இவர்கள் அமைச்சருக்குரிய பாதுகாப்புடன் சங்கத்தின் அலுவலகத்தில் உட்புகுந்தமை குறித்து சபாநாயகர் அவதானம் செலுத்த வேண்டும். இவர்களால் எனக்கு கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை பொலிஸில் இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடொன்றை நான் பதிவுசெய்துள்ள போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு இந்த விடயத்தை அனுப்பி முறையான விசாரணைகள் நடத்தி தீர்வை பெற்றுத்தருமாறு சபாநாயகரை கோருகின்றேன் என்றார்.

Read:  எரிபொருள் நெருக்கடிக்கு, பிரதமர் ரணில் வளைகுடா நாடுகளை இன்னும் நாடாமல் இருப்பது ஏன்?

இதன்போது எழுந்த, முன்னார் பிரதமரும் ஐ.தே.க.வின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தொடர்பில் வழக்கொன்று நீதிமன்றில் உள்ளது. முன்னாள் எம்.பி. யோகராஜனை இந்த சங்கத்தின் தலைவராக நியமித்திருந்த தருணத்தில் நீதிமன்றத்தால் இடைக்கால தடை உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் வாரத்தில் நீதிமன்றத்தில் இதுகுறித்த தீர்ப்பு வெளியாகவுள்ளது. ஆகவே, நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை எடுத்துக்கொள்ளுமாறு கோருகிறேன் என்றார்.

இதன்போது எழுந்து வடிவேல் சுரேஸ் எம்.பி, தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையே தான் இங்கு சுட்டிக்காட்டியதாக கூறியதுடன், தோட்டப்புற மக்களை ஏமாற்ற வேண்டாமென ரணில் விக்கிரமசிங்கவுடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இதன்போது வடிவேல் சுரேஷை கட்டுப்படுத்துமாறு ரணில் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். சபாநாயகரும் வடிவேல் சுரேஷை அமருமாறு பல தடவைகள் கூறிய போதும் அதனை வடிவேல் சுரேஷ் காதில் வாங்காது உரக்க கத்திக்கொண்டிருந்தார். இதன்போது கோபமடைந்த ரணில் விக்கிரமசிங்க, இந்த பைத்தியகாரனை அமரச்சொல்லுங்கள் என்று கூறிவிட்டு நீதிமன்றில் உள்ள ஒரு விடயம் குறித்து பேசுவது சிறப்புரிமைகளுக்கு எதிரானது எனக் கூறியதுடன், இங்கு பாதுகாப்பு அல்ல நிதி தொடர்பிலான பிரச்சினையே உள்ளது என்றார்.

நான் சிறுபான்மை இன பிரதிநிதி. தொழிற்சங்கத்தின் தலைவராக உள்ளேன் .எனது கௌரவத்துக்கு இழுக்காக பேச வேண்டாமென வடிவேல் சுரேஸ், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எச்சரித்தார். இதன்போது எழுந்த ஹரின் பெர்ணான்டோ எம்.பி, நான் இந்த சங்கத்தின் தலைவராக உள்ளேன். வடிவேல் சுரேஸ் சிறப்புரிமை கேள்வியையே எழுப்பியுள்ளார். வேறு எதனையும் அவர் கூறவில்லை. முன்னாள் எம்.பி.க்கள் சிலர் அமைச்சுக்கு உரிய பாதுகாப்புகளை பயன்படுத்தி அலுவலகத்தின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்ததாகவே கூறியுள்ளார். இங்குள்ள நிதியோ அல்லது வேறு எதுவோ காணாமால்போனால் அதற்கான வழக்குக்கு ஒருநாள் நாம் பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்படும் என்பதையே வடிவேல் சுரேஷ் கூறுகிறார். 100 மில்லியனுக்கும் அதிகமான நிதி அதில் உள்ளது. நாம் திருடர்கள் இல்லை. அந்த நிதியில் கை வைக்க மாட்டோம். அது தோட்டத் தொழிலாளர்களின் நிதி . வெலிக்கடை பொலிஸில் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றே வடிவேல் சுரேஸ் இங்கு கூறியுள்ளார் என்றார்.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு

மீண்டும் எழுந்த ரணில் விக்கிரமசிங்க எம்.பி, நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் சிறப்புரிமைகள் மீறப்பட்டதா என அறிந்து கொள்ளுமாறே இ ங்கு கோரிக்கை விடுத்தேன் என்றார்.

இதன்போது குறித்த விடயம் குறித்து அவதானம் செலுத்துவதாக கூறி சபாநாயகர் சர்ச்கையை முடிவுக்கு கொண்டுவந்தார்.

பா. கிருபாகμன், ந.ஜெயகாந்தன் – தினக்குரல் 23/9/21