பால்மா விலை தொடர்பில் நாளை தீர்மானம்

வாழ்க்கை செலவு குழு நாளை(24) முற்பகல் 10 மணியளவில் அலரிமாளிகையில் கூடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

பால்மா விலை அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பால்மா விலையினை அதிகரிக்குமாறு அதன் இறக்குமதியாளர்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்தை கோரியிருந்தனர். எனினும் விலை அதிகரிப்பிற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.

இதனையடுத்து, தங்களுக்கு ஏற்படும் நட்டத்தினை கருத்திற் கொண்டு பால்மா இறக்குமதியினை இறக்குமதியாளர்கள் இடைநிறுத்தியதால் சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.

இது தொடர்பில், பால்மா இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சருக்கும் இடையில் கடந்த 19ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது ஒரு கிலோகிராம் பால்மா விலையினை 350 ரூபாயால் அதிகரிக்க வேண்டும் என இறக்குமதியாளர்களால் கோரப்பட்ட நிலையில், எ ஒரு கிலோகிராம் பால்மா விலையினை 200 ரூபாயினால் அதிகரிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டது

இதற்கமைய இது தொடர்பிலான இறுதி தீர்மானமானது நாளை இடம்பெறவுள்ள வாழ்க்கை செலவு குழு கூட்டத்தில் எட்டப்படவுள்ளதுடன்,  தற்போது, தேசிய பால்மாக்களின் விலைகளையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பால்மா உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள்; நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது இந்த கோரிக்கையை விடுத்துள்ளனனர்.

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகளுக்கமைய தேசிய பால்மாக்களின் விலைகளையும் அதிகரிக்குமாறு உள்ளூர் பால்மா உற்பத்தி நிறுவனங்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -தமிழ் மிற்றோர்