வட்ஸ் அப் ஊடாக பண மோசடி ; இரு நைஜீரிய பிரஜைகள் கைது

இணையம் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் இருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சி.ஐ.டி.யின் கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த  முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும்   58 மற்றும் 30 வயதுகளை உடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்ததாவது,

‘இந்த  இரண்டு சந்தேகநபர்களும் இலங்கை பெண்ணொருவருக்கு,  பரிசொன்று  கிடைத்துள்ளதாகவும் அதனைப் பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்டளவு பணத்தை வைப்புச்செய்ய வேண்டுமெனவும் கூறி  வட்ஸ் அப்  ஊடாக குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். குறித்த பரிசின் புகைப்படத்தையும் அனுப்பியுள்ளனர். அத்துடன்  இந்த விடயம் உண்மை என்பதை உணர்த்துவதற்காக பல்வேறு உபாயங்களைக் கையாண்டுள்ளனர். இந்நிலையிலேயே பொலிஸ் விசாரணையில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.’ என தெரிவித்தார்.

விசாரணைகளின்படி கைது செய்யப்பட்ட நைஜீரியர்களான சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

(எம்.எப்.எம்.பஸீர்)-வீரகேசரி-

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price