அரசாங்கத்தில் மோசடிகள்- மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்!

மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய அரசாங்கம் செயற்படவில்லை.  பொதுத்தேர்தல் அல்லது வேறொரு தேர்தலை நடத்தினால் அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள நிலைப்பாட்டை தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும் என  அபயராம  விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனைத் தெரிவித்த அவர்,

2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நாட்டுக்கு எதிரான பல செயற்பாடுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன. நாட்டை பாதுகாக்க வேண்டிய தேவை காணப்பட்டது. 

சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் நாடு முன்னேற்றமடைய வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்பாகவும் காணப்பட்டது. 

இதன் காரணமாகவே 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முன்னின்று செயற்பட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம்.

சுபீட்சமான எதிர்கால கொள்கையில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் சிறந்ததாக காணப்பட்டதை கண்டு மகிழ்ச்சியடைந்தோம். 

ஆனால் சுபீட்சமான இலக்கு கொள்கைத் திட்டம் புத்தகத்தை மாத்திரம் வரையறுத்தாக தற்போது காணப்படுகிறது. 

ஊழலை ஒழித்து, அரச நிதி மோசடியாளர்களை தண்டிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கத்தில் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை. 

அரச நிதி மோசடியாளர்கள் எவரும் தண்டிக்கப்படவில்லை.  பெற்றுக்கொள்ளப்பட்ட மக்களாணை தவறாக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

அரசாங்கம் தனது ஆட்சி தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை அறிய விரும்பினால் பொதுத்தேர்தல் அல்லது வேறெந்த தேர்தலையாவது நடத்தினால் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.  

அரசாங்கம் தவறை திருத்திக் கொண்டு மக்களாணைக்கு அமைய செயற்பட வேண்டும் என பல முறை அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். 

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

இருப்பினும் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. ஆகவே மக்களே  தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.

(இராஜதுரை ஹஷான்)-வீரகேசரி-