மின் துண்டிப்புகளுக்கு பின்னால் ஏதாவது சதி திட்டம் இருக்கின்றதா? – முஜுபுர் ரஹூமான் கேள்வி

தொடர்ச்சியான மின்துண்டிப்புகள் தொடர்பில் தமக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹூமான் இது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும்  கூறியதாவது,

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரு வாரங்களுக்குள் திடீர் மின்சார துண்டிப்புக்கள் இடம்பெற்று வருவது நாட்டு மக்களுக்கு மாத்திரமின்றி எமக்கும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 

இதேவேளை நான்கு நாட்களுக்கு தினந்தோறும் ஒரு மணித்தியாலம் மின்சாரத்தை துண்டிப்பதாக மின்சாரசபை அறிவித்துள்ளது. இதற்கான அவசியம் என்ன? தற்போது காலநிலை மாற்றம் எதுவும் ஏற்படவும் இல்லை. 

இந்நிலையில் இவ்வாறான தீர்மானம் எடுப்பதற்கு எந்த விடயம் தாக்கம் செலுத்தியுள்ளது என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மின்சார விநியோகத்தின் போது பல மோசடிகள் இடம்பெற்ற வந்துள்ளமையை கடந்த காலங்களில் நாம் கண்டறிந்திருந்தோம். இந்த செயற்பாடுகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதா? என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த கால ஆட்சியின் போது நுரைச்சோலையில் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக பாரியளவிலான பணம் செலவிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தற்போது மின்விநியோகம் தொடர்பில் சிக்கலை ஏற்படுத்தி மீண்டும் ஒரு அனல் மின் நிலையத்தை உருவாக்கும் எண்ணத்திலா ? இவ்வாறான மின்துண்டிப்புகள் இடம்பெற்று வருகின்றன என்று எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அனல் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க அதிகளவான பணத்தை செலவிட வேண்டி ஏற்படுவதுடன் , இதனால் சூழல் மாசடைவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதேவேளை சூரியக்கல மின் உற்பத்தி இந்நாட்டுக்கு தேவையில்லை என்ற கருத்தும் தற்போது கூறப்பட்டு வருகின்றது. 

Read:  மீண்டும் ரணில் !!

பல அபிவிருத்தியடைந்த நாடுகள் சூரியக்கலம் போன்ற நவீன முறையிலான மின் உற்பத்திகளை ஊக்குவிப்பதன் ஊடாகவே ,தனது நாட்டின் வளர்ச்சியையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.  

இந்நிலையில் நாட்டில் தற்போது தொடரும் மின் துண்டிப்புகளுக்கு பின்னால் ஏதாவது சதி திட்டம் இருக்கின்றதா? என்ற சந்தேகம் நிலவி வருகின்றமையினால் , இது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

SOURCEவீரகேசரி பத்திரிகை (செ.தேன்மொழி)