முஸ்லிம்கள் கொரோனாவை பரப்பினார்களா? போலி குரல் பதிவு அம்பலம்

முஸ்லிம்கள் வேண்டுமென்றே கொரோனா வைரஸை பரப்புவதாக, உளவுத் தகவல் எனக் கூறி போலி குரல் பதிவொன்றினை வெளியிட்ட நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரைக் கைதுசெய்ய சி.ஐ.டி. யின் சிறப்புக்குழு ஊடாக  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஒழுக்காற்று மற்றும்  சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

முஸ்லிம்கள் வேண்டுமென்றே கொரோனாவை பரப்புவதாக, தனது பிரதானி தம்மை அறிவுறுத்தியுள்ளதாக குரல் பதிவினை வெளியிட்ட நபர், தன்னை உளவுத் துறை உறுப்பினராக அதில் காட்ட முற்பட்டிருந்தார்.

எனினும்  சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைகளில் அவருக்கும் உளவுத் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகவும்,  அந்த போலியான குரல் பதிவை வெளியிட்ட நபர் மற்றும் அதனை சமூகத்தில் பரப்பியோரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண  சுட்டிக்காட்டினார்.

பல்பொருள் அங்காடிகளுக்கு செல்லும் முஸ்லிம்கள், கொரோனாவை பரப்பும் நோக்குடன், அங்குள்ள பொருட்களில் உமிழ்வதாகவும், அதனை ஒப்புவிக்க வீடியோ சாட்சிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தன்னை உளவுத்துறை உறுப்பினர் என அடையாளப்படுத்திக்கொள்ள முற்படும் குறித்த சந்தேக நபர்  தனது குரல் பதிவில் பதிவிட்டுள்ளார். 

எனினும் அது முற்று முழுதான பொய் எனவும் அவ்வாறான எந்த வீடியோ ஆதாரமோ, வேறு தகவல்களோ இல்லை எனவும்  அந்த குரல் பதிவு முற்றிலும் இனங்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

இது குறித்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில்,

இந் நாட்களில் பல் பொருள் அங்காடிகள்  மூடப்பட்டுள்ளன. அதனால் முஸ்லிம் இனத்தவர் மட்டுமன்றி யாருக்கும் அங்கு செல்ல முடியாது.  

இது முற்றிலும் இனவாத, இன வெறுப்புணர்வை தூண்டும் விதமாக புனையப்பட்ட கதை.  அதனை உண்மையென நம்பவைக்கவே வீடியோ ஆதாரம் உள்ளதாக குறித்த சந்தேக நபர் குரல் பதிவில் கூறியுள்ளார். 

எனினும் அவ்வாறான எந்த வீடியோக்களும் இல்லை.  அவ்வாறான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். சற்று சிந்தியுங்கள். சிந்தித்து பார்த்தால் யாரும் இவ்வாறான தகவல்கலை பகிர மாட்டீர்கள்’  என தெரிவித்தார்.  (எம்.எப்.எம்.பஸீர்)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters