இலங்கையில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இலங்கையில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதென இந்தியாவின் பிரபல சஞ்சிகை யான ‘புரொன்ற்லைன்’ தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பிடியில் இலங்கை சிக்கியுள்ளது. உணவுக்கு மாத்திரமின்றி மருந்துக்கும் தட்டுப்பாடு இலங்கையில் ஏற்பட்டுள்ளது.சீனி, அரிசி உட்பட பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் கடைகளுக்கு முன்னால் வரிசைகளில் நிற்பதனை அவதானிக்க முடிகிறது.

உணவு பற்றாக்குறைக்கு நாடு தயாராகியுள்ள நிலையில் பெருமளவு விலையிலும் மக்கள் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.

இலங்கையில் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளன. சாதாரண மக்களால் இந்த நிலைமையை தாங்கிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதனை தொடர்ந்து இலங்கை அரசு பொருளாதார நடவடிக்கை தொடர்பில் அவசரகால நிலைமையை அறிவித்துள்ளது.

வெளிநாட்டு இருப்பு குறைந்து வருவதால் நாணய மாற்று விகிதங்கள் பலவீனமடைந்துள்ளது. இறக்குமதி மற்றும் கடன் தவணைகளை செலுத்த இலங்கை சிரமப்படுகிறது. மற்ற நாடுகளில் இருந்து உணவு மற்றும் மருந்துகளை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எரிசக்தி தேவைகளுக்காக எரிபொருள் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வது எதிர்காலத்தில் நெருக்கடிக்கு வழிவகுக்கும் எனவும் இலங்கை அரசாங்கம் பொதுமக்களுக்கு எரிபொருளை கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. (தினக்குரல் 10-9-21)

Read:  ஜம்இய்யத்துல் உலமாவை சந்திக்கிறார் ஜயசுமான