ராஜபக்சக்களின் ஆட்சி இத்துடன் முடிவுக்கு வரும்

ராஜபக்சக்களின் ஆட்சி இத்துடன் முடிவுக்கு வரும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவிப்பு

பாதுகாப்பு செயலாலரை போன்று ஜனாதிபதிக்கு செயற்ப ட முடியாது. பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டதை போன்றே இப்போதும் செயற்படுவது மாற்றப்பட வேண்டும் எனத்தெரிவித்துள்ள முருத்தெட்டுவே ஆனந்த தேரர்,

நாட்டுக்கு சேவையாற்றிய ராஜபக்சக்களின் ஆட்சி இத்துடன் முடிவுக்கு வரும் எனவும் கூறியுள்ளார். அபயராம விகாரையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், எமக்கு கோத்தபய ராஜபக்சவை பதவிக்கு கொண்டு வரவே விருப்பமாக இருந்தது.

ஆனால் இன்று பணியாற்றுவது கோத்தபய ராஜபக்ச ஜனாதிபதியா அல்லது நந்தசேன ராஜபக்சவா? என கேட்கத் தோன்றுகின்றது.

நந்தசேன ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சில் பதவி வகித்து சிறப்பான சேவைகளை வழங்கினார். மக்கள் மத்தியில் ஒரு தெளிவு ஏற்பட்டது. பெரிய தேவைப்பாடு ஒன்று உருவானது. எமது நாட்டிற்கு இவரை போன்ற ஒருவர் வந்தால் நிச்சயம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற ஒரு எண்ணம் இருந்தது. பாதுகாப்பு செயலாளராக இருந்த நந்தசேன ராஜபக்ச இந்த நாட்டிற்கு நல்லதொரு முன்னுதாரணமாக இருந்தார்.ஆனால், இன்று கோத்தபய ராஜபக்ச இந்த நாட்டின் ஜனாதிபதி, அந்த பாதுகாப்பு செயலாளரை போன்று இந்த ஜனாதிபதிக்கு செயற்பட முடியாது.

ஜனாதிபதி ஒருவர் அதற்கும் மேல் இருக்க வேண்டும். பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டதை போன்றே இப்போதும் செயற்படுவது விரைவில் மாற்றப்பட வேண்டும். அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியுமாயின் அதனை ஏற்றுக்கொள்வோம். ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவே இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அனைத்தும் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளன .

Read:  இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு 28ல் பயணம்

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மீள்வது தொடர்பிலும் , குறைந்த விலைக்கு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வவந்து குறித்தும் மக்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

அரசாங்கம் வேடிக்கை காட்டுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தொடர்பில் நன்கு அறிவோம்.

நடுத்தர மக்கள் அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் மாபியாக்களாக செயற்படவில்லை. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களில் பெரும்பாலானோர் சந்தை மாபியாக்களாக செயற்படுகிறார்கள். பொருத்தமானவர்களுக்கு உரிய பதவி வழங்கவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்த உரிய நட வடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. திறமையானவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படவில்லை. நாட்டுக்கு சேவையாற்றிய ராஜபக்சக்களின் ஆட்சி இத்துடன் முடிவுக்கு வரும் என்றார்.