அரிசி, சீனிக்கும் இன்று அவசரகாலச் சட்டம். யுத்தம் வந்தால் என்ன செய்வீர்கள்?

அரிசி, சீனிக்கு அவசரகால சட்டம் கொண்டுவருகின்றீர்கள் என்றால் யுத்தம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று தெரியவில்லை. அவசரகால சட்டத்தின் மூலம் மக்களை அடக்க முடியாது. இப்போது மக்கள் சிறைச்சாலைகளுக்கு பயப்படுவதில்லை. அங்கு செல்வதற்கு அவர்கள் தயாராகவே இருக்கின்றனர் என்று ஐக்கிய மக்கள்சக்தி எம்.பி. யான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்

சட்டவிரோதமாக சம்பாதித்த பணம், வரி செலுத்தப்படாது வைத்திருந்த கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் செயற்பாடே இந்த சட்டமூலத்தின் ஊடாக நடக்கவுள்ளது. வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள பணத்தை அங்கேயே முதலீடு செய்து அந்த பணத்தை இங்கு சட்ட அந்தஸ்தை பெற்றுக்கொள்ளலாம்.

இங்கு சட்டப்படி வணிகம் செய்து முறையாக நடப்பவர்களுக்கு இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் நிலைமை ஏற்படலாம். இங்கு இப்படி செய்கையில் பாகிஸ்தானில் இதுபோன்று சட்டவிரோத பணத்தை வைத்திருப்பவர்களை சிறையில் அடைக்கின்றனர். அப்படி இங்கு செய்தால் அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கைகொள்ள முடியும்.

இதேவேளை அவசரகால சட்டம் தொடர்பில் கூறுவதானால் இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கை பேணுவதற்கே அவசரகால சட்டம் இதுவரையில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இப்போது அரிசி, சீனி அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலமே அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க முடியுமென்று கூறுகின்றனர். இதனை நம்ப முடியாது.

Read:  எரிபொருள் நெருக்கடிக்கு, பிரதமர் ரணில் வளைகுடா நாடுகளை இன்னும் நாடாமல் இருப்பது ஏன்?

நுகர்வோர் சட்டங்கள் இருக்கும் போது, அவசரகால சட்டம் அவசியமற்றது. இந்த விடயத்திற்கு அவசர கால சட்டத்தை கொண்டு வருகின்றீர்கள் என்றால் யுத்தம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று தெரியவில்லை. அப்போது பெரிய புதிய சட்டங்களை கொண்டுவருவதற்கு தேடி அலைய வேண்டி வரலாம்.

மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மக்களை அடக்குவதற்கே இந்த அவசரகால சட்டம் கொண்டு வரப்படுகின்றது. இப்போது மக்கள் புதிதாக சிந்திக்க தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு சிறைச்சாலைகளுக்கு பயமில்லை. அங்கு செல்ல அவர்கள் தயாராக இருக்கின்றர். இளைய தலை முறை சட்டத்திற்கு மதிப்பளிப்பதை தவிர, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு கௌரவமளிக்க தயாராக இல்லை என்றார்.

பா.கிருபாகμன், ந.ஜெயகாந்தன்