ஊழல் வியாபாரிகளையும் அரச அதிகாரிகளுக்கு துணைநின்ற ஊழல்வாதிகளையும் காப்பாற்ற அரசாங்கம் சட்டமும் கொண்டுவந்துள்ளது

ஊழல் குற்றங்களை தடுப்பதாகவும் பொருளாதரத்தை கட்டியெழுப்புவோம் என ஆட்சிக்கு வந்தவர்கள் ஊழல் வியாபாரிகளுக்கும், அரச அதிகாரிகளுக்கும் துணைநின்று ஊழல்வாதிகளை காப்பாற்ற சட்டமும் கொண்டுவந்துள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக சபையில் தெரிவித்தார்.  

61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த மூன்று மாதங்களில் ஒரு இலட்சம் மக்கள் வீதிக்கு இறங்கியதாக ஆளும் தரப்பினர் கூறுகின்றனர். மக்கள் வீடுகளில் இருக்க முடியாது விதிக்கு இறங்கவில்லை, அவர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு, வளங்கள் விற்கப்படுவதற்கு எதிராகவே மக்கள் வீதிக்கி இறங்கினர் என்பதை மறந்துவிட வேண்டாம். அதேபோல் இவர்கள் ஆட்சியை அமைக்கும் வேளையில் நிதி நெருக்கடி இல்லை, சிறப்பாக ஆட்சியை நடத்துவோம் என்றார்கள், இன்று நிதி அமைச்சர் தமது நெருக்கடி நிலைமையை கூறுகின்றார்.

கடந்த காலங்களில் அபிவிருத்திகள் என்ற பெயரில் கப்பமும்,தரகுப்பணமும் அமைச்சர்களின் பைகளுக்கே சென்றது. நிதி அமைச்சரே தலையிட்டு பல்வேறு அழுத்தங்களை வழங்கியுள்ளீர்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் பல்வேறு தலையீடுகளை செய்துள்ளார். கொவிட் நெருக்கடிக்கு அரசியல் தலையீடுகளே காரணம், ஒரு சிலருக்கு கோட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்காது நாட்டின் நெருக்கடியை மாற்றியமைக்க முடியாது.

Read:  ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சவூதியிடம் நிதி உதவி பெற தீர்மானம்

வெளிப்படுத்தப்படாத தேசிய மற்றும் சர்வதேச சொத்துக்கள் உள்ளன, இதன் பின்னனியில் ஒரு அரசியல் கூட்டணி உள்ளது, அவர்களுடன் இணைத்த ஊழல் வியாபாரிகள் சிலர் உள்ளனர். அவர்களுக்கு துணைபோகும் அரச அதிகாரிகளும் உள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளனர்.

ஒரு சிறிய குழுவிடம் அளவுக்கு அதிகமான சொத்து குவிக்கப்பட்டுள்ளது. இவற்றை பறிமுதல் செய்வோம் என்று வந்தவர்கள் இன்று ஆட்சியில் ஊழல்வாதிகளுக்கு துணை செல்கின்றனர். அதுமட்டுமல்லாது இந்த ஊழல்வாதிகளை காப்பாற்ற சட்டமும் கொண்டுவந்துள்ளனர்.

அதேபோல் இந்த ஊழல்வாதிகளுக்கு வரி சலுகை கொடுக்கப்பட்டு வருகின்றது. மிக அதிகளவான வரி செலுத்தப்படாதுள்ளது. அதனை கைவிடும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே இந்த சட்டமூலம் ஒரு ஊழல் கூட்டணியை காப்பாற்ற கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் முறையான பல திருத்தங்களை செய்ய வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)-வீரகேசரி-