குறிப்பிட்ட ஒரு பிரிவினரை போஷிப்பதற்காகவே அரசாங்கத்தின் சட்ட ஏற்பாடுகள் – கபீர் ஹாசிம் 

அரசாங்கம் சட்டமாக்க நடவடிக்கை எடுக்கும்  அனைத்து சட்டங்களும் குறிப்பிட்ட ஒரு குழுவினரை போஷிப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது. வரிவிலக்களிப்பு சட்டமூலமும் அரசாங்கத்துக்கு தேவையான தனவந்தர்களை இலக்குவைத்தே மேற்கொள்ளப்படுகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசே ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் சட்டமாக்க நடவடிக்கை எடுக்கும் அனைத்து சட்டங்களும் குறிப்பிட்ட ஒரு குழுவினரை போஷிப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது. 2019இல் வரி குறைப்பு மேற்கொண்டதன் மூலம் அரச வருமானம் 60ஆயிரம் கோடி இல்லாமலாகி இருக்கின்றது. இந்த வரி குறைப்பினால் பொது மக்களுக்கு ஒரு சதமேனும் நன்மை கிடைக்கவில்லை. அப்படியாயின் யாருக்கு அதன் நன்மை கிடைத்தது.? நாட்டின் பொருளாதார பிரச்சினை ஆரம்பித்ததே இதன் பின்னராகும்.

அதேபோன்று 2002 வட்டிவீதத்தை குறைத்து தனவந்தர்களுக்கு உதவியளித்தார்கள். சாதாரண வியாபாரம் செய்பவர்களுக்கு வட்டி வீதம் குறையவில்லை. சாதாரண வியாபாரிகளுக்கும் மொத்த வியாபாரிகளுக்கும் இடையில் வட்டிவீதத்தில் பாரிய வேறுபாடு இருப்பதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அரசாங்கம் தற்போது வரி விலக்களிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதும் சாதாரண மக்களுக்காக அல்ல.

மேலும் நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமையில் என்டிஜன் தொகுதி இந்தியாவில் இலங்கை பணத்துக்கு 548 ரூபாவாகும். ஆனால் எமது நாட்டில் 2500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இது 5மடங்கு அதிகமாகும். ஏன் 548 ரூபாவுக்கு எமது மக்களுக்கு வழங்க முடியாது.? அதேபோன்று பி.சி,ஆர். பரிசோதனை ஒன்று இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாவாகும். எமது நாட்டில் 6500 ரூபாவாகும். இந்த உபரணங்களை தங்களுக்கு தேவையானவர்கள் கொண்டுவருவதற்கே அரசாங்கம் தற்போது வரிவிலக்களிப்பு சட்டமூலத்தை அனுமதித்துக்கொள்ள முயற்சிக்கின்றது.

அதனால் அரசாங்கம் சமர்ப்பித்திருக்கும் வரி விலக்களிப்பு சட்டமூலம் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை இலக்குவைத்து சமர்ப்பிக்கப்பட்டதாகும். எமது பொருளாதாரத்தில் இருக்கும் பிரச்சினைகளை அரசாங்கம் முறையாக ஆராயவில்லை. அதனால் எமது வரிக்கொள்கை நிதிக்கொள்கையில் மாற்றத்தை மேற்கொள்ளவேண்டும். அதற்காக கட்டமைப்பு ரீதியிலான மாற்றத்தை மேற்கொண்டு  சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடவேண்டும்.

அத்துடன் நாட்டின் சுயாதீனத்தை பாதிப்படையச்செய்து  யாரிடமும் கடன் பெறுவதில்லை என அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் நாட்டின் வளங்களை அடியோடு வெள்ளைக்காரர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)-வீரகேசரி-

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter