கட்டுப்படுத்த முடியாத செலவுகள், குறைந்து போன வருமானம் எம்மால் எதுவும் முடியாது

கட்டுப்படுத்த முடியாத செலவுகள், குறைந்து போன வருமானம் எம்மால் தனியாக எதுவும் முடியாது

எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பை நாடும் நிதி அமைச்சர் பசில்

1600 பில்லியன் ரூபா வரை வருமானம் வீழ்ச்சி என்கிறார்.

கட்டுப்படுத்த முடியாத செலவுகள் குறைந்து போன வருமானம். இதுதான் இன் று நாடு எதிர்கொள்ளும் மிகப் பெரும் நெருக்கடி. இந்த நெருக்கடியை எம்மால் தனியாக எதிர்கொள்ள முடியாது.

எனவே எதிர்க்கட்சிகள் எமக்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, நீண்டகால பொருளாதார வேலைத்திட்டங்கள் மற்றும் கொரோனா காரணமாக இந்த ஆண்டில் மாத்திரம் 1500 பில்லியன் ரூபா முதல் 1600 பில்லியன் ரூபாவரை குறைவாகவே வருமானம் கிடைத்துள்ளதாகவும் கூறினார் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மேலும் பேசுகையில்,

முழு உலகமும் எதிர்கொண்டுள்ள கொரோனா தொற்றால் இலங்கை மக்களும் எமது பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அந்நிய செலவாணி தொடர்பில் பாரிய நெருக்கடிக்கும் எமது நாடு முகங்கொடுத்துள்ளது. அதேபோன்று தேசிய ரீதியிலான நிதி நெருக்கடிகளுக்கும் திறைசேரி முகங்கொடுத்துள்ளது. இந்த மூன்று காரணிகளே தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பிரதான நெருக்கடிகளாகவும் . அதற்கான தீர்வை தேட முழு அரசாங்கமும் ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன், எதிர்க்கட்சிகளும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்.

இத்தகைய நெருக்கடியான சூழலில் தனியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணவும் அரசியல் இலாபங்களை தேடவும் நாம் முற்படவில்லை. எதிர்க்கட்சிகள்மீது குற்றச்சாட்டுகளை சுமத்தவும் தயாரில்லை.இவ்வாறான கடினமான நேரத்தில் தனியாக பிரச்சினைகளை தீர்க்க முடியாது, அது முடியாத காரியம் என்பது எமக்கு தெரியும். தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி கொரோனா தொற்று பரவலினால் மட்டும் ஏற்பட்ட நெருக்கடிகள் மட்டுமல்ல. கடந்த காலங்களில் கையாளப்பட்ட பொருளாதார செயற்பாடுகள் காரணமாகவும் ஏற்பட்ட நெருக்கடியாகும் .நாட்டின் வருமானத்தை விடவும் செலவுகள் அதிகரித்துள்ளன .கடந்த ஓரிரு வருடங்களில் இருந்தல்லாது ஓரிரு தசாப்தங்களுக்கு முன்பிருந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

Read:  உலமா சபையின் தலைமைப் பதவியைத் தொடர்வாரா ரிஸ்வி முப்தி?

நாட்டுக்கு கிடைக்கும் வருமானம், அரசுக்கு கிடைக்கும் வருமானம் என்பனவற்றை நாட்டின் செலவுடன் ஒப்பிடுகையில் நாட்டின் வருமானம் மிகக் குறைவாகவே உள்ளது. ஒரு சில நேரங்களில் அநாவசிய செலவுகள், வீண் விரயம், ஊழல் என்பனவும் உள்ளதென்பது எமக்கு தெரியும். நீண்ட காலமாக இவை இடம்பெற்றவை என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எனவே உண்மையாக இந்த செலவுகளை குறைக்க எம்மால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்போம். தற்போது கொரோனா நிலைமைகள் காரணமாக எமக்குக் கிடைக்கவிருந்த வருமானமும் கிடைக்காது போயுள்ளது.

கொரோனா நிலைமைகள் காரணமாக இந்த ஆண்டில் மாத்திரம் நாம் எதிர் பார்த்ததை விடவும் 1500 பில்லியன் ரூபா முதல் 1600 பில்லியன் ரூபாவரை குறைவாகவே கிடைத்துள்ளது. குறிப்பாக நிதி அமைச்சின் கீழுள்ள மூன்று பிரதான நிறுவனங்கள் மூலமாகவே எமக்கு வருமானம் கிடைக்கின்றது.

சுங்கத் திணைக்களத்தின் மூலம்தான் அதிகமான வருமானம் அரசுக்கு கிடைக்கிறது. அதில் பிரதானமாக வாகனங்கள் இறக்குமதியில் பாரிய வருமானம் கிடைக்கிறது. ஆனால், கடந்த ஒன்றரை வருடமாக வாகனங்கள் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது. அந்நிய செலவாணியை ஈட்டிக்கொள்ளவே வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டது. மதுவரித் திணைக்களத்தில் இரண்டாவதாக வருமானம் கிடைக்கப்பெறுகிறது. அதேபோன்று சுற்றலாத்துறை வீழ்ச்சியடைந்ததால் வருமானம் குறைவடைந்துள்ளது.

இதனால் பல சட்டவிரோத செயற்பாடுகளும் கடந்த காலங்களில் வெகுவாக அதிகரித்துள்ளன. அடுத்தது இறைவரித்திணைக்களம். நேரடி வருவாய்க்கு அப்பால் வரிகள் மூலமாகவே அரசாங்கத்திற்கு அதிக வருமானம் கிடைத்தது. இது சரியா தவறா எனக் கூறத் தெரியவில்லை. ஆனால் இந்த நாட்களில் நாடு முடக்கப்பட்டுள்ள காரணத்தினால் 75-80வீதத்தில் அரசாங்கத்தின் வருமானம் குறைவடைந்துள்ளது.

Read:  உலமா சபையின் தலைமை பொறுப்பை ஏற்க ஒருவாரகால அவகாசம் கோரினார் ரிஸ்வி முப்தி

ஒருநாள் நாட்டை முடக்கினாலும் வற் வரி எமக்கு கிடைப்பதில்லை.ஆனால் வருமானம் குறைந்துள்ள நிலையில் செலவு குறையவில்லை.

முன்னாள் பிரதமர் இங்கு கொரோனா தடுப்பூசிகளுக்கான செலவு தொடர்பில் கேள்வி எழுப்பினார். எமக்கு கிடைக்கப்பெற்ற கொரோனா தடுப்பூசிகளில் 80 வீதமானவற்றை நாம் பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது, இப்போதும் அதற்கான பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வழமையை விடவும் இரு மடங்கினால் ஒட்சிசன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதற்காகவும் பாரிய தொகை செலவாகியுள்ளது. அதேபோல் நாடு முடக்கப்பட்ட போதும் அரச ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய கொடுப்பனவுகளை நாம் குறைக்கவில்லை. சுகாதார துறையினருக்கு மேலதிக கொடுப்பனவுகளை கொடுக்க வேண்டியுள்ளது. எனவே சகல துறையிலும் செலவு கூடியுள்ளது.

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பிலும் இதே நிலைமை தான் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு வருமான வழிமூலங்கள் முற்றாக இல்லாது போயுள்ளது. குறிப்பாக 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒவ்வொரு வருடமும் கிடைக்கப்பெற்றன.

அதேபோன்று வெளிநாட்டு தொழிலாளர்கள்மூலம் கிடைக்கப்பெற்ற வருமானங்களும் வீழ்ச்சிகண்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து பணம் கிடைக்கும் பிரதான துறைகளில் ஒன்றான சுற்றுலாத்துறை மூலம் பாரிய வருமானம் இருந்தது. அது தற்போது முடக்கப்பட்டுள்ளதுடன்,வெளிநாடுகளில் உள்ள எமது தொழிலாளர்களின் மூலமாக கிடைக்கும் வருமானமும் குடைவடைந்து வருகின்றது.

ஏற்றுமதியில் எமக்கு கிடைக்கும் வருமானத்தை ஓரளவு தக்கவைத்துக்கொண்டுள்ளோம். இவ்வருட இறுதிக்குள் அந்நிய செலாவணி தொடர்பில் ஒரு நல்ல நிலையை எட்ட முடியும். கடன் மற்றும் நன்கொடைகளை பொறுத்தவரையில், நன்கொடைகள் குறைவடைந்துள்ளன. எனவே சர்வதேச கடன்களை பொறுத்தவரை அவசியமான தேவைகள் தவிர்ந்து ஏனைய கடன்களை தவிர்த்துக் கொள்ளவே நடவடிகளை எடுத்து வருகின்றோம்.

Read:  இலங்கைக்கு அரபு நாடுகள் உதவத் தயங்குவது ஏன்?

இதற்கு முன்னர் நாம் பெற்ற கடன்களை நாம் செலுத்தியாக வேண்டும். அவற்றை நாம் சரியாக கையாண்டு வருகின்றோம். கடன் தவணையை நீடிக்கும் முயற்சிகளை கைவிட்டு முறையாக கடன்களை செலுத்தி கடன் நெருக்கடியில் இருந்து விடுபடவே முயற்சிக்கின்றோம். நாட்டின் சுயாதீனத்திற்கும் இறைமைக்கும் பாதிப்பு ஏற்படாத மற்றும் அரசியல் உடன்படிக்கைகள் இல்லாத விதத்தில் கடன் கொள்கைகளை கையாண்டு வருகின்றோம்.

இந்த ஆண்டில் கடன் நெருக்கடிகள் குறையாது போனாலும் அடுத்த ஆண்டில் இவை குறையும் என நம்புகின்றோம். அது குறித்து சிந்தித்து செயற்பட்டு வருகின்றோம். அதேபோல் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மூலமாக மக்களுக்கு அவசியமான வேலைதிட்டங்களுக்கான கடன்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். இவற்றின் மூலமாக வெளி நாட்டு கையிருப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

அதேபோல் எமது நாட்டின் விவசாயத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இதுவும் எதிர்காலத்தில் எமக்கு கைகொடுக்கும், அதேபோல் உற்பத்தித் துறையிலும் ஆர்வத்தை கூட்டும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக சுகாதாரத் துறைக்கு தேவையான மருந்துகள் சிலவற்றை இங்கேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலைன் போன்றவற்றை இங்கேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டை பெற்றுக்கொள்வதுடன் இங்கிருந்து பணம் வெளியில் செல்வதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

இவற்றை சட்டத்தின் மூலமாக கையாள வேண்டும் அதற்கு சகலரதும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எதிர்க்கட்சியினருக்கு இதன் முக்கியத்துவம் விளங்கும் என்பதனால் அவர்கள் எமக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகின்றேன் என்றார்.

பா.கிருபாகμன், ந.ஜெயகாந்தன்