கண்டி மாவட்டத்திற்கு 2 ஆம் கட்ட ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் – சன்ன ஜயசுமண

கண்டி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ஸ்புட்னிக் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாமலிருப்பவர்களுக்கான தடுப்பூசி தொகை இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று ரஷ்யாவின் கெமிலி நிறுவனம் அறிவித்துள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

நாட்டில் இதுவரையில் 159 088 பேருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. எனினும் 37 737 பேருக்கு மாத்திரமே இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சியோருக்கு வழங்குவதற்கான ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை. இது குறித்து கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கண்டி மாவட்டத்தில் ஒன்றரை இலட்சம் பேருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 30 000 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கெமிலி நிறுவனத்திடம் தொடர்ச்சியாக எஞ்சிய ஸ்புட்னிக் தடுப்பூசிகள் எப்போது கிடைக்கப் பெறும் என்பது குறித்து கேட்டுள்ளோம். 

இம்மாதத்திற்குள் எஞ்சிய 120 000 தடுப்பூசி தொகையை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று  ஞாயிற்றுக்கிழமை 4 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன. ஒரே சந்தர்ப்பத்தில் அதிகளவான தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும். 

இவ்வாறு இன்று வந்தடைந்த 40 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளையும் உள்ளடங்கலாக இதுவரையில் நாட்டுக்கு 220 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. நாளை  திங்கட்கிழமை முதல் தடுப்பூசி வழங்கலில் குறைபாடுகள் காணப்படுகின்ற மாவட்டங்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

-வீரகேசரி-எம்.மனோசித்ரா