பொறுப்புடன் செயற்படாவிடின் நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் – எச்சரிக்கிறார் நிமல் லான்சா

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலத்திலும், அதன் பின்னரும் நாம் அனைவரும் மிகுந்த பொறுப்புடன் செயற்படவேண்டும். 

அவ்வாறில்லை எனில் சுகாதார மற்றும் பாதுகாப்பு துறைகள் செய்கின்ற அர்ப்பணிப்புக்களின் பலன் அற்றுப்போகும்.

நாட்டின் பொருளாதாரமும் சரிவடையக்கூடும் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியிலும், அதன் பின்னரும் தொற்றினைக் கட்டுப்படுத்தும் அதேவேளை, பொருளாதார செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்வது மிக முக்கியத்துவமுடையதாகும். அவ்வாறில்லை எனில் முழுநாட்டு மக்களும் அதனால் ஏற்படக்கூடிய சவாலை எதிர்கொள்ள நேரிடும்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அவ்வாறில்லை என்றால் கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மாத்திரமல்ல, நாட்டின் அனைத்து துறைகளும் சரிவடையக்கூடும். 

இதன் காரணமாக நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமையளித்து பொருளாதார செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம்.

கொவிட் தொற்று எமது நாட்டுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல. இதனால் தற்போதுள்ள பொருளாதார நிலைமை தொடர்பில் புரிதலுடனும் பொறுப்புடனும் அரசாங்கம் செயற்படுகிறது என அவர் தெரிவித்தார்.

-வீரகேசரி-(எம்.மனோசித்ரா)

Previous articleஆசிரியர்களுக்கான கொடுப்பனவை தனியார் பஸ் ஊழியர்களுக்கு வழங்குமாறு கோரிக்கை
Next articleஇன்றைய வைத்தியர்கள் Today Doctors – Thursday, September 02