தடுப்பூசியையும், அறிவுறுத்தல்களையும் அலட்சியம் செய்வது ஆபத்தையே தரும்!

நாட்டில் கொவிட் 19 தொற்றின் பரவுதல் அச்சுறுத்தலும் அதன் தாக்கங்களும் நிலவிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷிணி பெர்னாண்டோ புள்ளே முக்கியமான வேண்டுகோள் ஒன்றை மக்களிடம் விடுத்திருக்கின்றார்.

‘அத்தியாவசிய தேவைகள் உட்பட பல்வேறு தேவைகளின் நிமித்தம் வீட்டிலிருந்து வெளியே செல்பவர்கள் உட்பட ஏனையவர்களும் மக்கள் கூடியிருக்கும் இடங்களில் தேநீரோ அல்லது தண்ணீரோ அருந்தக் கூட முகக்கவசத்தை அகற்ற வேண்டாம்’ என்று அவர் கேட்டிருக்கின்றார்.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷிணி பெர்னாண்டோ புள்ளே ஒரு மருத்துவ நிபுணராவார். அவர் கொவிட் 19 தொற்றின் தாக்கத்தையும் அதன் பயங்கரத் தன்மையையும் நன்கறிந்தவர்களில் ஒருவராவார்.

இது ஒரு சாதாரணமான வேண்டுகோள் அல்ல. இத்தொற்றின் தாக்கத்திற்கும் அதன் பாதிப்புக்கும் எவரும் உட்பட்டு விடக் கூடாது என்ற உச்சபட்ச அக்கறையுடன் விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கையாகவே இதனைக் கருத வேண்டும்.

ஏனெனில் இத்தொற்றானது சிலர் குறிப்பிடுவது போன்றோ அல்லது இன்னும் சிலர் நோக்குவது போன்றோ சாதாரண நோய்த் தொற்று அல்ல. இதற்கு இத்தொற்றுக்கு உள்ளாகி நோய் அறிகுறிகள் வெளிப்படுபவர்கள் அனுபவிக்கும் தாக்கங்களும் பாதிப்புக்களும் வேதனைகளும் நல்ல சாட்சியங்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் இராஜாங்க அமைச்சர் இவ்விதமான உருக்கமான வேண்டுகோளை விடுத்திருக்கின்றார்.

இது உண்மையில் காலத்திற்கு அவசியமான பெரிதும் வரவேற்கத்தக்க வேண்டுகோளாகும். ஏனெனில் இத்தொற்றை சிலர் சாதாரண தடிமன், காய்ச்சல் போன்றுதான் நோக்குகின்றனர். அதன் காரணத்தினால்தான் இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு தனிமைப்படுத்தல் ஊடரங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும், தொற்றின் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி வழங்குதலும் முன்னெடுக்கப்பட்டும் கூட, அவற்றின் முக்கியத்துவமும் தேவையும் பெரிதும் உணரப்படாத நிலையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் கவனயீனமாகவும் அசிரத்தையோடும் நடந்து கொள்பவர்களாக அநேகரைக் காண முடிகின்றது. இந்நிலைமை இத்தொற்றின் தாக்கத்தையும் பாதிப்புக்களையும் அறிந்துள்ளவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

இந்த நிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் மூலக்கூற்று மருத்துவ பீடத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவேந்திர, தற்போதைய சூழலில் உணவா? ஒட்சிசனா முக்கியம் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுமாறு தம் ‘ட்விட்டர்’ செய்தி மூலம் அண்மையில் மக்களிடம் குறிப்பிட்டிருந்தார்.

அந்தளவுக்கு பயங்கரமானது இத்தொற்று. இத்தொற்றின் அறிகுறிகளாக தடிமன், காய்ச்சல் போன்றவாறானவை வெளிப்பட்டாலும் அவை இத்தொற்றின் முழு வடிவமல்ல. இந்நோய்த் தொற்று மனிதனின் நோயெதிர்ப்பு சக்திக்கு சவாலாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. நோயெதிர்ப்பு சக்தியின் பலமும் வீரியமும்தான் இத்தொற்றின் தாக்கத்தையும் பாதிப்புக்களையும் தீர்மானிக்கக் கூடியதாக உள்ளன. அதாவது நோயெதிர்ப்பு சக்தி உடலில் வலுவாக இருப்பவர்களுக்கு இத்தொற்றுக்கான அறிகுறிகள் வெளிப்படாது.

அவர்கள் இத்தொற்றுடன் சுகதேகிகள் போன்று காட்சியளிப்பர். ஆனால் ஏனையவர்களுக்கு இத்தொற்றைப் பரப்பக் கூடிய காவிகளாக அவர்கள் இருப்பர். அதேநேரம் உடலில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாகக் காணப்படுபவர்களுக்கு இத்தொற்றின் தாக்கமும் பாதிப்புகளும் பெரும்பாலும் வெளிப்படும்.

இருந்த போதிலும், எவரது உடலில் நோயெதிர்ப்பு சக்தி பலமாக உள்ளது? எவரது உடலில் அது பலவீனமாக உள்ளது என்பதை ஒருவரை வெளிப்படையாகப் பார்த்து தீர்மானிக்க முடியாது. அதன் காரணத்தினால்தான் இத்தொற்றின் பரவுதலைத் தவிர்த்துக் கொள்வதற்காக அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை உச்சளவில் கடைப்பிடித்தொழுகுமாறும், இத்தொற்றின் தாக்கங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஏதாவதொரு தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறும் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட எல்லாத் தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். இவை சாதாரணமான வலியுறுத்தல் அல்ல என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

ஆகவே கடும் தாக்கத் தன்மைகளை கொண்டிருக்கும் இத்தொற்றின் பரவுதலுக்கு துணை போகாதிருப்பதிலும் இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதிலும் ஒவ்வொருவரும் உச்சபட்ச கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய கொவிட் 19 தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் முன்னெச்சரிக்கையும் வருமுன் காப்போம் ஏற்பாடுகளும் மிகவும் முக்கியமானவை. அதேநேரம் கவனயீனமும் அசிரத்தையும் ஆபத்துக்கு வழிவகுத்து விடலாம் என்பதையும் மறக்கலாகாது. – தினகரன்