கட்டுப்படுத்த முடியாத நிலையே உருவாகிறது

தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தவறால் கொவிட்டை கட்டுப்படுத்த முடியாத நிலையே உருவாகிறது – நாடு பாரிய அவல நிலைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்படும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

தொற்று நோய் தடுப்புப் பிரிவு முறையாக செயற்படாத காரணத்தினாலேயே நாட்டில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக, அரச மருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இனினும் இந்த தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு தமது குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு முறையாக செயற்பட தவறுமாக இருந்தால் நாடு மேலும் பாரிய அவல நிலைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்படும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை சந்தித்து கூறியுள்ளதாகவும், இதன்படி அவர் இந்த விடயத்தில் விரைந்து செயற்படுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம் கூறுகையில்,

கடந்த வெள்ளிக்கிழமை மாலை புதிதாக சுகாதார அமைச்சராக பதவியேற்ற கெஹலிய ரம்புக்வெல்லவை சந்தித்து கலந்துரையாடினோம். இந்த கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொற்று முகாமைத்துவம் தொடர்பில் சுகாதார அமைச்சு, ஜனாதிபதி ஆகியோருக்கு யோசனைகளை வழங்கியுள்ளது. இதன்படி புதிதாக பதவிக்கு வந்த சுகாதார அமைச்சருக்கு, கடந்த காலங்களில் நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள், இனிவரும் காலங்களில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அவருக்கு தெரிவித்தோம்.

இதில் தொற்று நோய் தடுப்புப் பிரிவு முக்கியமானது. இதன் பிரதானியே நாட்டு மக்கள் எவ்வாறான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். ஆட்சியாளர்கள் எவ்வாறான விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் சுகாதார துறையினர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்றும் அறிவிக்கும் தொழிநுட்ப அறிவை கொண்டவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் முறையாக செயற்பாட்டாலேயே இந்தத் தொற்றின் முகாமைத்துவத்தை மேற் கொள்ள முடியும்.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

ஆனால் நாட்டின் இந்தத் தடுப்புப் பிரிவு தமது பணிகளை சரியான முறையில் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நாங்கள் தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றோம். இந்தச் சந்திப்பின் போது, எதிர்வரப் போகும் நிலைமைகளை நாங்கள் சுகாதார அமைச்சருக்கு விளக்கியுள்ளோம். இதன்படி உரிய நடவடிக்கையெடுப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் காலங்களில் தொற்று நோய் தடுப்புப் பிரிவு முறையாக செயற்படும் என்று நாங்கள் நம்புகின்றோம். இதேவேளை தடுப்பூசி வழங்கும் திட்டத்திலும் குறைபாடுகள் காணப்படுகின்றன. தடுப்பூசி வழங்கலானது மரணங்களை தடுக்கும் வகையில் அமைய வேண்டும். அதன்படி முன்னுரிமை பட்டியலை தயாரித்து அதனை முன்னெடுக்க வேண்டும்.

இப்போது தினசரி மரண எண்ணிக்கை 200 ஐ தாண்டிவிட்டது. இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சாத்தியங்கள் உள்ளன. ஏற்படும் மரணங்களில் பெரும்பாலனவை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதுடன், அதில் 90 வீதமானவை தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாமையினால் ஏற்படுகின்றது. இதனால் அதனை தடுக்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இது தொடர்பாகவும் நாங்கள் சுகாதார அமைச்சருக்கு தெளிவுப்படுத்தியுள்ளோம்.

வீடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தொலைபேசி ரிங்கிங் ஊடாக மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை இனிவரும் காலங்களில் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு குறைபாடுகளை நிவர்த்தி செய்து முறையாக செயற்படாவிட்டால். நாடு பாரிய அவல நிலைக்கு செல்லும் என்பதனை தாம் எச்சரிக்கைக்கின்றோம் என்று தெரிவித்தார்.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

ந.ஜெயகாந்தன் -தினக்குரல் 30-8-21