எதிர்காலத்தில் எமது அரசியல் நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என நாங்கள் எங்களுடைய கவனத்தை செலுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் கூட ஏமாற்றப்பட்டு விட்டோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலின் போது வாக்களித்த மக்களுக்கும், தேர்தலில் பாடுபட்ட தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று -16- இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காகவும், கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வெற்றிக்காகவும் கம்பஹா, களுத்துறை, மாத்தறை போன்ற பகுதிகளில் நாங்கள் எங்களுடைய வேட்பாளர்களை நிறுத்தாமல் விட்டது. மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை கருதி மாறாக ஐக்கிய மக்கள் சக்தியினுடைய செயற்பாடுகள் தெற்கு மக்கள் மத்தியிலே நம்பிக்கையை பெற்றிருக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி பெற்றிருக்கின்ற ஆசனங்களில் 15 ஆசனங்களைக் மலையக மக்கள் முன்னணியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் பெற்றிருக்கின்ற போது தேசியப் பட்டியலுக்கு உரியவர்களாகவும், நாங்கள் இருக்கின்ற போது அந்த மூன்று கட்சிகளும் ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச தலைமையிலான அந்தக் குழுவோடு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அது மீறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் எமது பயணம் ஏமாற்றப்பட்ட பயணமாக இருக்க கூடாது என்பதற்காக கவனத்தை செலுத்தவுள்ளோம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸினுடைய வாக்கு ஒரு தனித்துவமான வாக்காகும்.
திருகோணமலை , அம்பாறை மாவட்டங்களில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றிருந்தால் தனியான ஒரு போனஸ் ஆசனத்தை இரண்டு மாவட்டமும் பெற்றிருக்கும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டிருந்தால் இரண்டு போனஸ் ஆசனங்களை பெற்றிருக்கும்.
கட்சியின் ஒற்றுமை கருதி, ஒப்பந்தம் கருதி நான் இம்முறை ஐக்கிய மக்கள் கட்சியில் போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இல்லாத பட்சத்தில் ஒரு முதன்மை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருப்பேன்.
எதிர்காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு மாபெரும் வெற்றியை ஒரு நாடாளுமன்ற தேர்தல் வருகின்றபோது 12 குறையாத ஆசனங்களையும், இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களையும் பெறக்கூடிய ஒரு வாய்ப்பை எங்களுடைய கட்சி பெற்றிருக்கின்றது.
வருகின்ற மாகாணசபைத் தேர்தலில் ஒவ்வொரு மாகாண சபையையும் தீர்மானிக்கின்ற கட்சியாக எமது கட்சி மிளிரப் போகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.