“அலி சப்ரி” – அவரை விட்டு விடுங்கள் .

ஜானதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி நீதி அமைச்சராக பதவி ஏற்றத்தில் இருந்து அவரை கொண்டாடும் பதிவுகளும் வர்ணிப்புக்களும் ஒருபுறம், விமர்சிக்கும் கருத்துக்கள் மறுபுறம் என்று இந்த நாட்களில் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களின் அரசியல் ஞானமும் அவரை ஆராய்வதிலேயே இருக்குறது.

அரசியலில் ஒரு புதுமுகம், அதுவும் முஸ்லிம்களின் அரசியல் சீரழிந்து சின்னாபின்ன பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இந்த சிங்கள அரசாங்கத்தில், மக்களால் தெரிவு செய்யப்படாமேலேயே அலி சப்ரி ஒரு முக்கிய அமைச்சு பதவிக்கு வருகிறார் என்பதை சமூகம் விவாதத்துக்கு உட்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் விவாதத்த்தையும் கருத்தாடல்களையும் இந்த தனி நபரை மையப்படுத்தியே நடத்துவதன் மூலம் இந்த தேர்தலின் பின் முஸ்லிம்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் மற்றும் ஒரு சமூகமாக தன்னை மீள் கட்டியெழுப்ப இருக்கும் இடைவெளி குறித்த நேர்மையான விவாதத்துக்கான வாய்ப்பு இழக்கப்படுவதாகவே காண்கிறேன்.

இதற்க்கு அப்பால் அலி சப்ரியை ஒரு முஸ்லீம் அமைச்சர் என்ற பார்வையில் அளவுக்கு அதிகமாக தலையில் தூக்கி வைப்பதன் மூலம் சிங்கள பேரினவாத சக்திகள் அவரை தாக்குவதர்க்கும் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை நியப்படுத்துவரத்துக்கும் இலங்கை முஸ்லிம்களே ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்.

அலி சப்ரியின் அரசியல் வரவு பாராட்டத்தக்கது. அவர் அமைச்சராக இருப்பதன் மூலம் நாட்டுக்கும் சமூகத்துக்கும் நன்மைகள் ஏற்படும் என்று நம்புவோம். அவரது அரசியல் பாதை குறித்து விமர்சனங்கள் உள்ளோர் அதன் தர்க்க ரீதியிலான நியாங்களை விளக்கவும் ஆராயவும் அவசரப்பட வேண்டியதில்லை. தற்போதைய சூழ்நிலையில் அவரது வருகையை ஒரு “பொசிட்டிவ்” வான விடயமாக பார்க்கும் அதேவேளை இது குறித்து ஓவர் ரியாக்ட் பண்ணாமல் இருப்பதும் முக்கியம்.

Read:  O/L அனுமதி அட்டை கிடைக்காவிட்டால் என்ன செய்வது?

அவர் டிவி யில் வந்து சொல்லும் ஒவ்வொன்றுக்கும் வியாக்கியானம் தேடி அவற்றை நாள் கணக்கில் பகிர்ந்து அவர் குறித்து மித மிஞ்சிய பிம்பத்தை எமக்கு நாமே உருவாக்கி கொள்ள வேண்டியதில்லை. அவர் அமைச்சராகி இருக்கிறார் அவரது பணியை செய்ய இடமளியுங்கள்.

அவர் முஸ்லிம்களுக்கான அமைச்சரோ முஸ்லிம்களால் தெரிவுசெய்யப்பட்ட அமைச்சரோ இல்லை. சிங்கள தேசியவாத சிந்தனை ஒரு வியூக ரீதியிலான தேவைக்கு அல்லது அவர் இதுவரை காலமும் கோத்தபாயாவுக்கு செய்த சட்ட உதவிக்கு நன்றி உபகாரமாக அவரை அமைச்சர் ஆக்கி இருக்குறது இதற்க்கு மேல் இதில் ஒன்றும் இல்லை.

முஸ்லிம்கள் இன ரீதியிலான கட்சி அரசியலை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் கலந்து பெரும்பாண்மை கட்சிகளுடன் இணைய வேண்டும் என்ற அலி சப்ரியின் கருத்தை முஸ்லிம்கள் ஒரு அறிவுபூர்வமான விவாதத்த்துக்கு உற்படுத்தலாம். இந்த விவாதம் அலி சப்ரி என்ற தனி நபரின் கருத்தை மையப்படுத்தி இல்லாமல் இன்றைய சூழ்நிலையில் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை மைய படுத்தியதாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் போராட்டம் ராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் அரசியல் செல்வாக்கும் பலமும் முற்று முழுதாக சிதைக்கப்பட்டுளள்ளது, முஸ்லிம்களின் பொருளாதார வளத்தையும், தொல்பொருள் என்ற பெயரில் பாரம்பரிய வாழ்விடங்களையும் குறிவைக்கும் நகர்வுகளை வெளிப்படையாக காண முடிகிறது. பவுத்த தேசியவாதம் அதன் பரிணாமத்தை உங்கள் வீட்டு வாசல் வரை விரிவு படுத்தி அரசியல் ரீதியில் வெற்றி கண்டுள்ளது.அலி சப்ரி பற்றிய புளகாங்கிதங்களை விட்டு தம் முன் உள்ள சவால்கள் குறித்து முஸ்லிம்கள் ஒரு நேர்மையான விவாதத்தை தொடங்க வேண்டும்.

Read:  மீண்டும் ரணில் !!
VIAMadawala-e-News
SOURCEபர்ஸான் பஷீர்