அரசாங்கம் சர்வாதிகாரமாக செயற்படுகின்றது – பா.உ ஹலீம்

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார துறையினரின் ஆலோசனைகளை செவிமடுக்காது இராணுவத்தினரின் யோசனைகளுக்கு மாத்திரம் முன்னுரிமை அளித்து அரசாங்கம் சர்வாதிகார போக்குடன் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
கொரோனா பரவல் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை மாத்திரமின்றி மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.அரசாங்கம் கொரோனா தொடர்பான உண்மையான தரவுகளை வெளியிடாமல் மூடி மறைக்கிறது.அரசாங்கம் சரியான தரவுகளை ஏன் மூடிமறைக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மாத்திரமே முன்னுரிமை அளித்த போதும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கரிசனையின்றி அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு யதார்த்தபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் அரசாங்கம் முன்னெடுப்பதாக தெரியவில்லை.இதன்காரணமாக தற்போது மக்களாகவே முன்வந்து பல நகரங்களில் வர்த்தக நிலையங்களை மூடி வருகின்றனர்.அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் மீதான மக்களின் எதிர்ப்பே இதன் மூலம் வெளிப்படுகிறது.மக்களே தங்களை பாதுகாத்து கொள்வதற்கு முன்வந்தமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

மக்களின் மனநிலையை புரியாத அரசாங்கம் சுகாதார துறை நிபுணர்களின் ஆலோசனைகளை செவிமடுக்காமல் இராணுவத்தின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.இது அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கையே எடுத்துகாட்டுகிறது.அரசாங்கத்தின் இவ்வாறான தன்னிச்சையான தீர்மானங்களினால் இறுதியில் பாதிக்கப்படுவது மக்களேயாகும்.நாட்டை முடக்குவதன் மூலமே தற்போதைய பரவலை கட்டுப்படுத்த முடியும்.

தற்போது நாடுபூராகவும் பரவுகின்ற டெல்டா வைரஸ் மிகவும் பயங்கரமானது.வேகமாக பரவக்கூடியது.எனவே எமது பிரதேசங்களை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டும்.நாம் முடிந்தளவு வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது.எமது பிள்ளைகள்,குடும்பத்தினரை பாதுகாத்து கொள்வதற்கு அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என நான் மக்களிடம் தயவுடன் வேண்டிகொள்கிறேன்..

இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் மார்க்க வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளிப்புதுடன் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எமது குடும்பத்தினருக்காகவும் அல்லாஹ்விடம் துஆ கேட்போம் என்றார்