20 மில்லியன் செலவில் 70 கட்டில்கள் – சுகாதார அமைச்சி அனுமதி கிடைத்ததும் நடவடிக்கை
“கொவிட் 19 தொற்று நோயினால் பாதிக்கப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் பள்ளி வாசல் வளாகத்தில் கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையமொன்றினை அமைப்பதற்கு திட்டமிட் டுள்ளது.
பள்ளிவாசல் ஹமீதியா மண்டப கட்டிடம் புனரமைக்கப்பட்டு இச்சிகிச்சை நிலையம் நிறுவப்படவுள்ளதாகவும் இதற்காக சுகாதார அமைச்சின் அனுமதியைக் கோரியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றதும் மஹல்லாவா சிகளையும் கலந்தாலோசித்து இத் திட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் எம்.தெளபீக் சுபைர் “விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
அமைக்கப்படவுள்ள கொவிட் 19 சிகிச்சை நிலையத்துக்கு 20 மில்வியன் ரூபா செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளதுடன் 70 கட்டில்கள் பொருத்தப்படவுள்ளது. கட்டிடபுனர் நிர்மாணம், வைத்திய உபகரணங்கள், கட்டில்கள் மற்றும் தளபாடங்களுக்கு 20 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
இது தொடர்பில் நீதியமைச்சர் அலி சப்ரியின் ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பள்ளி வாசல் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கு உதவிகள் வழங்க விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கை பெறுப்பாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறு பள்ளிவாசல் தலைவர் எம்.தெளபீக் சுபைர் அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (ஏ.ஆர்.ஏ. பரீல்) விடிவெள்ளி 19-8-21