கொவிட் -19: புதிய கட்டுப்பாடுகள் அமுல்! (முழுமையான விபரம்)

கொவிட் -19 பரவல் நிலைமையைக் கருத்திற் கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் இம்மாதம் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய அத்தியாவசிய தேவை உள்ளிட்ட காரணிகளுக்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியிடங்களுக்குச் செல்ல முடியும் என்றும் , தொழிலுக்காக வெளியில் செல்ல இடமளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டல் சுற்று நிரூபத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

போக்குவரத்து

மாகாணங்களுக்குள் இயங்கும் பொது போக்குவரத்து சேவைகளில் இருக்கை எண்ணிக்கைக்கு அமைய மாத்திரமே பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும். தனி வாகனங்களில் பயணிப்போரும் இருக்கை எண்ணிக்கைக்கு அமையவே செல்ல வேண்டும்.

பயன்பாட்டு சேவைகள்

மின்சாரம் , நீர் , தொலைதொடர்பு , எரிபொருள் நிரப்பு நிலையங்கள் , சமையல் எரிவாயு விற்பனை நிலையங்கள் , வாகனங்கள் பழுதுபார்க்கும் நிலையங்கள் , டயர் சேவைகள் மற்றும் தபால் , தபால் பொதி சேவைகள் குறைந்தளவான ஊழியர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அரச, தனியார் அலுவலகங்கள்

அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் குறைந்தளவான ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்பட வேண்டும் என்பதோடு அவர்கள் மாகாணங்களுக்குள் உள்ளவர்களாக இருக்க வேண்டும். வெளிமாகாணங்களிலுள்ள ஊழியர்கள் தொடர்பில் அலுவலக பிரதானி தீர்மானிக்க முடியும்.

சுகாதார வழிகாட்டலுக்கமைய அனுமதி வழங்கப்படுபவை

பொருளாதார நிலையங்கள் , தொழிற்சாலைகள் (ஆடைத் தொழிற்சாலை, விவசாயம் , மீன்பிடி ) உள்ளிட்டவை, ஆடை விற்பனை நிலையங்கள் , தையல் நிலையங்கள் , நடைபாதை அல்லது நடமாடும் விற்பனை, கட்டட நிர்மாணப்பணிகள் இடம்பெறும் இடங்கள் உள்ளிட்டவை சுகாதார விதிமுறைகளுக்கமைய செயற்பாடுகளை முன்னெடுக்கலாம்.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

அனுமதி வழங்கப்படாதவை

கூட்டங்கள் , மாநாடுகள் , கருத்தரங்குகள் , அங்குரார்ப்பண , திருமண நிகழ்வுகள் , விருந்துபசாரங்கள் , ஒன்று கூடல்கள் , வீடுகளுக்குள் ஏற்பாடு செய்யப்படும் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. கடற்கரைகளில் ஒன்று கூட முடியாது.

பல்பொருள் அங்காடிகள் , சில்லறை விற்பனை கடைகள்

பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் ஒரே நேரத்தில் 25 சத வீதமானோர் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும். நபர்களுக்கிடையில் 1.5 மீற்றர் சமூக இடைவெளியை பேணக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மறு அறிவித்தல் வரை மூடப்படுபவை

வணிக வளாகங்கள் (Shopping Malls) , முன்பள்ளிகள் , ஆரம்ப பாடசாலைகள் , உயர் கல்வி நிலையங்கள் , தனியார் அல்லது பிரத்தியேக வகுப்புக்கள் என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்.

நிதி நிறுவனங்கள்

வங்கிகள் , நிதி நிறுவனங்கள் , அடகு நிலையங்கள் உள்ளிட்டவை மொத்த கொள்ளவில் 10 சத வீதமான வாடிக்கையாளர்களை அல்லது சேவை பெறுநர்களை மாத்திரமே அனுமதிக்க வேண்டும்.

திறந்த சந்தைகள்

சுப்பர் மார்கட்கள் அதிக பட்மாக 25 சத வீதமானோரை மாத்திரமே அனுமதித்து , சுகாதார வழிகாட்டல்களுக்கமைய செயற்பட முடியும்.

நீதிமன்றங்கள்

ஊழியர்கள் உள்ளடங்கலாக 25 சத வீதமானோர் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் அல்லது சந்தேக நபர்கள் விசேட அனுமதியின்றி பிரவேசிக்க முடியாது. வழக்கு விசாரணைகள் இடம்பெறும் போதும் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

சிறைச்சாலை

சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

மரண சடங்குகள்

திடீர் மரணங்கள் விசாரணைகள் நிறைவடைந்த உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் இறுதி சடங்குகள் நிறைவடைய வேண்டும். இதன்போது மிக நெருங்கிய 25 நபர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

இன்று முதல் மூடப்படுபவை

உள்ளக விளையாட்டு அரங்குகள் , சிறுவர் பூங்காக்கள் , நீச்சல் தடாகங்கள் , இசை கச்சேரிகள் , தொடுகை நிலையங்கள் இன்று (18) முதல் மூடப்பட்டுள்ளன.

உணவகங்கள்

உல்லாச விடுகளில் 50 வீதமானோரே அனுமதிக்கப்பட வேண்டும். பாரிய உணவகங்கள் , ஹோட்டல்களில் உணவை கொண்டு செல்ல முடியும். ஒரே நேரத்தில் 25 சத வீதமானோரே அனுமதிக்கப்பட வேண்டும். எனினும் ஹோட்டல்கள் , உல்லாச விடுகளில் நிகழ்வுகள் களியாட்டங்களில் ஈடுபட முடியாது. (எம்.மனோசித்ரா) Metronews