இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஒப் ஆப்கானிஸ்தான் – சீனா ஆதரவு

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் இஸ்லாமிக் அமீரகம் (எமிரேட்ஸ்) ஒப் ஆப்கான் என்று ஆப்கானிஸ்தானை பிரகடனப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க படைகள் வெளியேறியதும் தலிபான்கள் மிக விரைவாக ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினர். ந்தூஸ், தலுகான், நிம்ருஸ், செபர்கான், சாரஞ், சமங்கன், புல் இகும்ரி, தக்கார் உட்பட 10 மாகாணங்களின் தலை நகரங்களை கைப்பற்றிய தலிபான் அமைப்பினர் அதனை தொடர்ந்து கந்தகாரை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலையும் தாலிபான்கள் கைப்பற்றினர்.

அதன்மூலம், ஆப்கானிஸ்தான், தலிபான்களின் கட்டுக்குள் அதிகாரப்பூர்வமாக செல்வது உறுதியானது. சுமார், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலை தலிபான் அமைப்பினர் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த அஷ்ரப் கானி தஜிகிஸ்தானுக்கு தப்பியோடியுள்ளார். அவர் பெருமளவான பணத்தோடு தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காபூல் நகருக்குள் தலிபான்கள் வந்துவிட்டதை உறுதி செய்த ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறி தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காபூல் நகருக்குள் தலிபான்கள் வந்துவிட்டதையடுத்து, நேற்றுமுன்தினம் இரவுமுதல் காபூல் நகருக்கு வர்த்தகரீதியான விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், காபூலில் வசித்துவரும் அமெரிக்க மக்கள் மிக விரைவாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று அங்கிருந்து வெளியேறுமாறும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த இரு வாரத்தில் மட்டும் தலிபான்கள் 13 மாகாணங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஜனாதிபதி மாளிகைக்குள் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்து, அதைக் கைப்பற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அஷ்ரப் கானி தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்ட கருத்தில் ” இப்போதிருந்து ஆப்கானிஸ்தானுக்கும், மக்களுக்கும் தலிபான்கள்தான் பொறுப்பு. மக்களின் மரியாதை, சொத்து, பாதுகாப்பு அனைத்துக்கும் தலிபான்கள் பொறுப்பேற்க வேண்டும். ஆயுதங்கள் ஏந்திய தலிபான்கள் அல்லது 20 ஆண்டுகாலம் என் உயிரைக் காப்பாற்றிய அன்புக்குரிய தேசத்தைவிட்டுச் செல்வதா என்ற ஊசலாட்டம் இருந்தது. ஆனால், தலிபான் தீவிரவாதிகள் கத்தியின், துப்பாக்கி முனையில் நாட்டை வைத்துள்ளார்கள். அவர்களால் நாட்டு மக்களின் மனதை வெல்ல முடியாது. நான் வெளியேறாவிட்டால், ஏராளமான மக்கள் கொல்லப்படுவார்கள், காபூல் நகரம் சின்னாப்பின்னாகும், மிகப்பெரிய மனிதப்பேரழிவு நிகழும், 60 இலட்சம் மக்கள் வாழும் நகரம் இரத்தக்களறியாகும். காபூல் நகரை இரத்தக்களரியாக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா அப்துல்லா காணொளியில் கூறுகையில் “ இதுபோன்ற கடினமான நேரத்தில் ஆப்கானிஸ்தானை விட்டு அஷ்ரப் கானி சென்றிருக்க கூடாது. அவருக்கு கடவுள்தான் நம்பிக்கை அளிக்க வேண்டும். இந்த கடினமான இரவும் பகலும் கடக்கட்டும். மக்களுக்கு அமைதியான நாட்கள் கிடைக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் உலக நாடுகள் பலவும் காபூலில் இருந்த தங்களது தூதரகத்தை மூடியுள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள தங்கள் நாட்டு பிரதிநிதிகளை நாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.. காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து செயல்படுவதை நேட்டோ படையினர் உறுதி செய்கின்றனர். அதன்மூலம், மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதை உறுதி செய்கிறது. ஓரிரு தினங்களில் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கையில் எடுப்பார்கள் என்று தெரிகிறது.

ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் அமீரகம் என்று என்று பிரகடனப்படுத்துவோம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் இருக்கும் ஜனாதிபதி மாளிகையில் கூட்டமாக தாலிபன் வீரர்கள் அமர்ந்திருக்கும் புகைப்படம், வெளியாகியுள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் படைகளால் ஆட்சியிலி ருந்து விரட்டப்பட்ட தாலிபன்கள், வெறும் இருபதே நாட்களில் மீண்டும் தேசத்தைக் கைப்பற்றிவிட்டனர். தலைநகர் காபூலின் எல்லையில் தலிபன்கள் தடம் பதித்த விஷயம் அறிந்ததும், பல நாடுகளின் தூதரகங்கள் பதற்றமாகிவிட்டன.

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா என வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் பறந்துவந்து தங்கள் தேசத்தவரையும் தூதரக அதிகாரிகளையும் மீட்டுச் சென்றன. ஆயினும் நேற்றுவிமான நிலையத்தில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5பேர் உயிரிழந்ததோடு காபூல் விமான நிலையமும் மூடப்பட்டது. அத்தோடு அமெரிக்க விமானம் ஒன்றில் தப்பி செல்ல விமானத்தில் மேற்பரப்பில் ஏறிச்சென்றவர்களில் மூவர் பாதிவழியிலேயே விழுந்து உயிரிழந்தனர்.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளி அதிநவீன போர்க்கருவிகள், சக்தி வாய்ந்த போர் விமானங்கள் இத்தனையும் இருந்தும் வெறும் 75 ஆயிரம் பேர் கொண்ட தாலிபன் படையை வீழ்த்த முடியாமல் சமாதானம் செய்துகொண்டு அமெரிக்கா பின்வாங்கியிருக்கிறது.

“ஆப்கானிஸ்தான் மண்ணில் அல்கொய்தா அமைப்புக்கோ, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கோ புகலிடம் தர மாட்டோம்” என தாலிபன் அமைப்பு கொடுத்த உறுதிமொழியை மட்டும் எடுத்துக்கொண்டு அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

முன்பைவிட பலம் பெற்று ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ‘இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஒப் ஆப்கானிஸ்தான்’ என்று நாட்டுக்குப் பெயரும் கொடுத்துவிட்டனர். ஏற்கனவே தலிபான்களின் ஆட்சியில் ஆண்களுக்கு தாடியைக் கட்டாயமாக்கி, பெண் கல்வியை ஒழித்து, பெண்கள் பணிக்குச் செல்வதை மறுத்து, பொழுதுபோக்குகளைத் தடை செய்து நாட்டை கடும் கட்டுப்பாடோடு ஆட்சி செய்யப்பட்டமை உலகளவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. மீண்டும் மிக கடுமையான ஆட்சியை வழங்கிவிடுவர் என்ற அச்சம் அந்த நாட்டு மக்களுக்கு உள் ளதால் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர்.

இப்போது தலிபான் தலைவராக இருப்பவர், மவ்லவி ஹிபத்துல்லா அகுந்த் ஸடா ஆவார். இஸ்லாமிக் எமிரேட் ஒப் ஆப்கானிஸ்தானின் தலைவர் மவ்லவி ஹிபத்துல்லா அகுந்த்ஸடா என்பது உறுதியாகி விட்ட நிலையில், அவருக்குக் கீழ் ஆப்கானை நிர்வகிக்க 3 துணைத் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

உலகநாடுகள் தலிபான்களை கண்டு அஞ்சினாலும் தலிபானுடன் நட்புறவை கொள்ள போவதாக சீனா அறிவித்துள்ளது. தொடர்ந்து பாகிஸ்தானும் ஆதரவான மன வெளிப்பாட்டை வெளியிட்டுள்ளது. ரஸ்யா பேச்சுவார்த்தை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் ஆப்கானிலிருந்து தப்பி வெளியேறவே அந்நாட்டு மக்கள் முயற்சித்து வருகின்றனர்.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page