பெற்றோரே அவதானம்! மாணவர்களை இலக்கு வைத்து நடவடிக்கை – பொலிஸார் அதிர்ச்சி

கொழும்பு நகர்புறங்களில் காணப்படும் உயர்நிலை பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போலி இன்ஹெலர்கள் மூலம் போதைப் பொருள் கடத்தல்கள் இடம்பெற்றுவருவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன, போதைப் பொருள் அடங்கிய இன்ஹெலர் ஒன்று மாணவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை இவ்வாறான கடத்தல் காரர்களிடமிருந்து தங்களது பிள்ளைகளை காப்பற்றிக் கொள்வதற்கு பெற்றோர் அவதானத்துடன் செயற்படுவதுடன் , பாடசாலை மாணவர்கள் தொடர்பில் ஆசிரியர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் இவ்வாறான நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் அதனை 1997 என்ற இலக்கத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தெரிவிக்குமாறும் வேண்டுகோள்விடுத்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொழுப்பு நகர் பகுதியில் காணப்படும் உயர் பாடசாலைகளை இலக்குவைத்து , அங்கு கல்விகற்றுவரும் மாணவர்களிடம் மிக சூட்சுமுகமான முறையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போதைப்பொருட்களை விற்பனை செய்துவருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.  

ஆஸ்த்துமா நோயாளர்கள் பயன்படுத்தும் இன்ஹெலர்களை போன்ற பொருட்களில் போதைப் பொருள்களை வைத்து விற்பனை செய்துவருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாடசாலை மாணவர் ஒருவரிடமிருந்து இது போன்ற போதைப்பொருள் அடங்கிய இன்ஹெலர் ஒன்றை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டுள்ளதுடன் , இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்தனர்.

இவ்வாறான போதைப்பொருள் நிரப்பப்பட்ட இன்ஹெலர்களை கடத்தல்காரர்கள் மாணவர்களுக்கு 15 ஆயிரம் ரூபா பணத்திற்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. 

இவ்வாறான இன்ஹெலர்கள் அனுமதியுடன்  தயாரிக்கப்பட்டு வருகின்றமையினால், போலியாக தயாரிக்கப்பட்டுள்ள இன்ஹெலர்களிலே இவ்வாறு போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இது போன்ற கடத்தல்காரர்களின் வலையிலிருந்து மாணவர்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் பெற்றுறோர்களும் , பாடசாலை ஆசிரியர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். 

இதேவேளை இவ்வாறான கடத்தல்காரர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றால் உடனே அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.


காலையிலேயே தங்க விலைகளை SMS ஆக பெற்றுக்கொள்ள, கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும். T&C*

* Get daily Srilanka gold rate to your mobile- Click above link & send the SMS – 2.5+tx/msg-Mobitel-2/day if balance available

SOURCEவீரகேசரி பத்திரிகை -செ.தேன்மொழி