கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 23 கர்ப்பிணிகள் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 23 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர். கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாவது அவர்களுக்கு மாத்திரமின்றி பிறக்கவுள்ள குழந்தையின் உயிருக்கும் ஆபத்தாகும். 

கர்ப்பிணியொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானால் பிறக்கும் குழந்தைக்கு நுரையீரல் மற்றும் மூளை பாதிப்புக்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக பிரசவம் மற்றும் நரம்பியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சமிந்த மாதொட்ட தெரிவித்தார்.

இவ்வாறான நிலைமையில் தடுப்பூசியைப் பெறாமல் இருப்பது கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பற்றது. எனவே ஸ்புட்னிக் தவிர்ந்த ஏனைய எந்தவொரு தடுப்பூசியையும் கர்ப்பிணிகள் நிச்சயம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர் சமிந்த மாதொட்ட தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாவது அவர்களுக்கு மாத்திரமின்றி பிறக்கவுள்ள குழந்தையின் உயிருக்கும் அச்சுறுத்தலாகும். 

கர்ப்பிணிகள் தொற்றுக்கு உள்ளானால் குறிப்பிட்ட தினத்திற்கு முன்னரான பிரவசம் அல்லது குழந்தை இறக்கக் கூடிய அபாயம் அதிகமுள்ளது. உரிய தினத்திற்கு முன்னரே பிரசவம் இடம்பெற்றால் பிறக்கும் குழைந்தைக்கு நுரையீரல் மற்றும் மூளை பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்.

எனவே பிறக்கவுள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கர்ப்பிணிகள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 

கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் கர்ப்பிணிகள் நிமோனியா நிலை ஏற்படவும் , அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படக் கூடிய வாய்ப்புக்களும் அதிகமாகும். 

எனவே அவர்கள் வெளியில் செல்லாமல் வீடுகளுக்கு இருப்பது மாத்திரமே முழுமையான பாதுகாப்பாக அமையாது.

Read:  உலமா சபையின் தலைமைப் பதவியைத் தொடர்வாரா ரிஸ்வி முப்தி?

காரணம் வீட்டில் உள்ள ஏனையவர்கள் வெளியிடங்களுக்கு சென்று வருபவர்களாகவே இருப்பர். எனவே தடுப்பூசி பெற்றுக் கொள்ளல் மிகுந்த பாதுகாப்பை அளிக்கும். தடுப்பூசி இன்றி இருப்பதானது பாதுகாப்பற்றது. 

அமெரிக்காவில் ஒரு இலட்சத்து 30,000 கர்ப்பிணிகளுக்கும் , ஸ்கொட்லாந்தில் 4,000 கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நாடுகளில் இவர்களையும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத கர்ப்பிணிகளையும் பரிசோதித்து போது எவ்வித மாற்றங்களும் இனங்காணப்படவில்லை. அதாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை.

இலங்கையிலும் இதுவரையில் 30,000 கர்ப்பிணிகளுக்கு சைனோபார்ம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று ஸ்புட்னிக் தவிர்ந்த ஏனைய அனைத்து தடுப்பூசிகளையும் கர்ப்பிணிகளுக்கு வழங்க முடியும் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் 12 வாரங்களிலும் தடுப்பூசிப் பெற்றுக் கொள்வதிலும் எவ்வித சிக்கலும் இல்லை என்றார்.

-வீரகேசரி- (எம்.மனோசித்ரா)