மாகாணசபை தேர்தலுக்கு தயாராகும் சஜித் அணி

மாகாணசபை தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் சக்தியின் தலைவர் மயந்த திசாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஐக்கிய மக்கள் சக்தி மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகவே இருக்கின்றது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியான வேட்பாளர்களை கண்டறிவதற்காக பத்திரிக்கையூடாக விளம்பரங்களை செய்யவும் எதிர்பார்த்திருக்கின்றோம். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைமை தொடர்பில்  பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தெளிவுப்படுத்தியுள்ளமையினால், அதிகமான மக்கள் எம்முடன் இணைந்துக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் மாகாணசபை தேர்தலில் போட்டியிடச் செய்வதா? என்பது தொடர்பில் கட்சிதலைவருடன் கலந்துரையாடியதன் பின்னர் தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். இந்நிலையில் மாகாணசபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியுள்ளது. அரசாங்கம் வழமையான தேர்தல் முறையையே மாகாண சபை தேர்தலின் போதும் பயன்படுத்த போகின்றதா? என்பது தொடர்பில் தெரிந்துக் கொள்வது அவசியமாகும்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆளும் தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்தும் மாகாணசபை செயற்பாடுகளை முன்னெடுப்பார்களா? இல்லையா? என்பது தொடர்பிலும் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

Read:  இரண்டு கேஸ் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளன.
SOURCEவீரகேசரி பத்திரிகை - செ.தேன்மொழி