சஜித் தரப்புக்கு 10 தேசியப்பட்டியல், கிடைத்திருந்தால் பங்காளிகளுக்கு பகிரப்பட்டிருக்கும்

தேசிய பட்டியலில் ஒரு ஆசனத்தை பெறுவது மட்டும் தான் எங்கள் இறுதி இலக்கு அல்ல. அதை பெறாதது எங்கள் பலவீனமும் அல்ல. அது எங்கள் இயலாமையும் அல்ல. இது தொடர்பாக நாம் எடுத்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும். 

இந்நாட்டில் இன்று ஒப்பீட்டளவில், அனைத்து இனங்களையும் அணைத்து செல்லும் ஒரே சிங்கள தலைவராக இருக்கும் சஜித் பிரமதாசவை, சிங்கள மக்கள் மத்தியில், இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாக, பலவீனமானவராக காட்ட முயலும் அரசின் சதி முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் துணை போக முடியாது. சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சி தலைவர்கள், சஜித் பிரேமதாசவை சுவரில் சாய்த்து, பயமுறுத்தி காரியம் செய்து கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயத்தை இந்நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசாங்க ஊடகங்கள் மற்றும் அரசு சார்பு தனியார் ஊடகங்கள் பெரும் முயற்சி எடுத்தன. இப்படி சொல்லியே ரணில் விக்கிரமசிங்கவை இந்த அரசாங்க கட்சி அணி, அரசு சார்பு பெளத்த பிக்குகள் அணி என்பவை அழித்தன. ஆகவே சஜித் பிரேமதாசவையும், இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாகவும், பலவீனமான தலைவராகவும் சித்தரித்து, ஆரம்பத்திலேயே அழித்துவிட இந்த அரசாங்கம் மிகப்பெரும் முயற்சி எடுத்தது. இவற்றை நாம் உணர்ந்தோம். 

இந்த தொலைநோக்கு பார்வையினாலேயே, தமிழ் முற்போக்கு கூட்டணி, தேசிய பட்டியல் தொடர்பில் நிதானமாக நெகிழ்வு தன்மையுடன் முடிவெடுத்தது. நாங்களே உருவாக்கிய ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை நாமே சிதைக்க கூடாது என நாம் முடிவு செய்தோம். இந்நாட்டில் இன்று ஒப்பீட்டளவில், அனைத்து இனங்களையும் அணைத்து செல்லும் ஒரேயொரு சிங்கள தலைவராக இருக்கும் சஜித் பிரமதாசவையும், ரணில் விக்கிரமசிங்கவை போன்று, சிங்கள மக்கள் மத்தியில் பலவீனமானவராக காட்டும் அரசின் சதி முயற்சிகளுக்கு நாம் துணை போக முடியாது என தீர்மானித்தோம். 

ஆகவே, இது தொடர்பில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை அவருக்கு நாம் வழங்கினோம். இந்த நிதானமான பொறுப்பு வாய்ந்த தொலைநோக்கு கொண்ட எமது நிலைபாட்டை எமது வாக்காளர்கள், சிவில், சமூக பிரதிநிதிகள், வர்த்தக சமூக பிரதிநிதிகள், மத தலைவர்கள், ஆசிரியர்கள், ஊடகத்துறை தலைமை பிரதானிகள், தமிழ் சமூக ஊடக முன்னோடிகள் உள்ளிட்ட அனைத்து தமிழ் பேசும் மக்களும் இன்று புரிந்துக்கொண்டுள்ளார்கள் என நான் நம்புகிறேன் தெரிவு செய்யப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். 

இந்த முன்னணி விவகாரம் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, தமது முன்னாள் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலைமையின் பிடிவாதம் காரணமாக, புதிய ஒரு கட்சியை அமைத்த, சில நாட்களுக்கு உள்ளேயே, தேர்தலை சந்திக்க வேண்டி ஏற்பட்டதால், மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றிபெற கூடிய பலரை கொழும்பில் கட்சி தலைமையகத்தில் தங்கியிருந்து தேர்தல் பணி செய்யுமாறு தாம் பணித்துள்ளதாக, சஜித் பிரேமதாச தமிழ், முஸ்லிம் பங்காளி கட்சிகளிடமும், ஜாதிக ஹெல உறுமயவிடமும் விளக்கி கூறினார். நாம் எதிர்பார்த்த பத்து தேசிய பட்டியல் கிடைத்து இருக்குமாயின் இந்த தர்ம சங்கடம் ஏற்பட்டு இருக்காது எனவும் கூறியிருந்தார். 

நமது கட்சிக்கு உரிய தேசிய பட்டியலை தேடி பெறுவது என்பதில் நாம் மிகவும் அக்கறையுடன் இருந்தோம். ஆகவே, நாம் அமைதியாக இருக்கவில்லை. அது தொடர்பில் எமது குரலை நாம் உரக்க எழுப்பினோம். எனினும் முடிவு எடுக்கும் போது நாம் நிதானமாக முடிவுகளை எடுத்தோம். எமது தேசிய கூட்டணியை உடைத்துக்கொண்டு நாம் சென்றால் அரசாங்கம் மகிழ்வடையும். அதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. ஐக்கிய மக்கள் சக்தி என்ற எமது தேசிய கூட்டணி உடையுமானால், அது இரண்டு நாட்களுக்கு தலைப்பு செய்திகளாக இருக்கும். பின், இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு எஞ்சி இருக்கும் ஒரே தேசிய நம்பிக்கையும் இழந்து, நாம் மேலும் பலவீனமடைவோம். 

ஏற்கனவே வடக்கில், கிழக்கில் இந்த அரசாங்கம் தமிழ் கட்சிகளை மிகவும் பலவீனடைய செய்துள்ளது. அங்கே ஊடுருவி உள்ளது. இந்நிலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை இணைத்து நாம் உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி என்ற இந்த தேசிய கூட்டணியையும் நாம் சிதைக்கவும், பலவீனமடையமும் விட முடியாது. ஆகவே தான் எமது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு உள்ளேயும், தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகளிடமும் கலந்து பேசி இந்த முடிவுகளை எடுத்தோம். 

தேசிய பட்டியல் என்பது வேறு. நமது மக்கள் வாழும் மாவட்டங்களில் தமிழ் எம்.பி.க்கள் தெரிவு செய்யப்படுவது என்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள கூடாது. இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் இன்னமும் சற்று அதிகமாக சிந்தித்து வாக்களித்திருந்தால், கொழும்பு மாவட்டத்தில் இன்னமும் அதிகமாக வாக்களித்து இருந்தால், இந்த மாவட்டங்களில் தமிழ் எம்பீக்கள் மேலதிகமாக உருவாக வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், மக்கள் வாக்களிக்காமல் தவறு செய்து விட்டார்கள். 

இரத்தினபுரியில் மொத்த தமிழ் வாக்காளர் தொகை சுமார் 75 ஆயிரம். ஆனால், எமது வேட்பாளர் சந்திரகுமாருக்கு சுமார் 36 ஆயிரம் பேர் தான் வாக்களித்துள்ளார்கள். இன்னமும் சுமார் 9 ஆயிரம் பேர் அவருக்கு வாக்களித்திருந்தால், சந்திரகுமார் அங்கே தமிழ் எம்.பி.யாக உருவாகி இருப்பார். கேகாலை மாவட்டத்தில் மொத்த தமிழ் வாக்கு 40 ஆயிரம். எமது வேட்பாளர் பரணீதரன், சுமார் 23 ஆயிரம் வாக்குகளை பெற்றார். அங்கே இன்னமும் 5 ஆயிரம் வாக்குகளை அவர் பெற்றிருந்தால் அவர் அங்கே தமிழ் எம்.பி.யாக வெற்றி பெற்று இருப்பார். 

இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா போன்ற மாவட்டங்களில் எமது தொலைபேசி சின்னத்துக்கு எதிரான அணிகளில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் என்ற போலி நபர்களில் ஒருவர்கூட அவ்வந்த மாவட்டங்களில், இருநூறு (200) விருப்பு வாக்குகள் கூட பெறவில்லை. பணம் வாக்கிக்கொண்டு எம்மை அழிக்க வேண்டும் என கெட்ட எண்ணத்தோடு மட்டும் செயற்பட்ட இவர்கள் படுதோல்வி அடைந்துள்ளார்கள். ஆனாலும், தேர்தல் காலங்களில் இவர்கள் செய்த பொய், புரட்டு போலி பிரசாரங்கள் மக்களை அதைரியப்படுத்தின. ஆகவே இவர்கள் தான், இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா மாவட்டங்களில் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெறாமைக்கு மூலக்காரணங்கள் ஆகும். 

அதேவேளையில், தேர்தல் காலங்களில் எமக்காக ஒரு துரும்பும்கூட எடுத்து போடாத, எமக்கு ஆதரவாக ஒரு ஊடகங்களில் எழுதாத, சமூக ஊடகங்களில் பதிவு போடாத, தேர்தல் நிதி இல்லாமல் நாம் பட்ட எமது நடைமுறை கஷ்டங்களை உணராத, எமக்கு எந்தவித உதவியும் செய்யாத, அதையும் மீறி சென்று எமக்கு உபத்திரவம் செய்வதற்காக, எமக்கு எதிரான அணி அரசியல்வாதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு, எமக்கு எதிரான அணியில் சேர்ந்து, போலி வேட்பாளார்களாக போட்டியிட்டு, எமக்கு எதிராக பொய் பிரசாரங்களை செய்து, கூசாமல் எமது வாக்கை சிதறடித்த, சோரம்போன அரசியல் வியாபாரிகள், இன்று வெட்கமில்லாமல் “தேசிய பட்டியலை சண்டையிட்டு எடுங்கள்” என்றும், அதை எடுத்து, “இவருக்கு கொடுங்கள்” என்றும், “அவருக்கு கொடுக்க வேண்டாம்” என்றும் எமக்கு அறிவுரை கூறுகிறார்கள். கூக்குரலிடுகிறார்கள். நிறுவனரீதியான பாரம்பரியமற்ற, சில சுயாதீன ஊடகங்களிலும் இத்தகைய பல போலிகள் ஒளிந்து தேர்தல் கால வியாபாரம் செய்து பணம் தேடியுள்ளார்கள். இத்தகைய சோரம்போன போலி நபர்களுக்கு நாம் எமது வெற்றிகளின் மூலம் மறக்க முடியாத பாடங்களை கற்று கொடுத்துள்ளோம். இனியும் இத்தகைய நபர்களிடம் ஏமாற வேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters