செப்டெம்பரில் இலங்கை வரவுள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற குழு – மரிக்கார் எம்.பி.

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்கு செப்டெம்பரில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற குழு நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

செப்டெம்பரில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற குழுவொன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறும் பயங்கரவாத தடைசட்டத்தைப் பயன்படுத்தி இந்த அரசாங்கம் இதனை முழுமையாக சர்வாதிகார ஆட்சியாக மாற்றியுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்ற குழுவின் வருகைக்கான பிரதான காரணம் இதுவேயாகும். இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை நீக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஏற்றுமதி மேலும் குறைவடையும் பட்சத்தில் தற்போதுள்ளதை விட பாரிய டொலர் பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதோடு அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும்.

நாட்டில் பால்மா தட்டுப்பாடு காணப்படுவதாகக் கூறப்பட்டாலும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படும் குனதாச அமரசேகர , கொழும்பு துறைமுகத்தில் 40 மெட்ரிக் தொன் பால்மா இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் எதற்காக இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது என்று கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

பால்மாவிற்கான இறக்குமதி வரி முற்றாக நீக்கப்பட்டுள்ள நிலையிலும் பால்மாவின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நியூசிலாந்து இறக்குமதி நிறுவனம் கோரியுள்ளது. 200 ரூபாவால் அதிகரிக்கப்படாவிட்டாலும் 100 ரூபாவையேனும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நிச்சயம் அனுமதி வழங்கும்.

இறக்குமதி வரியையும் நீக்கி , விலை அதிகரிப்பிற்கும் வாய்ப்ப்பளிப்பதன் மூலம் மோசடியில் ஈடுபடுவது யாருடைய தேவைக்காக என்பதை அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும். குறித்த நியூசிலாந்து பால்மா இறக்குமதி நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இரகசிய கூட்டு காணப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.

(எம்.மனோசித்ரா)-வீரகேசரி-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page