பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலிருந்து, தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக, எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் நாட்டு மக்கள் அனைவரும் சுய பயணக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

தாம் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு இனி அரசாங்கத்திடம் கோர போவதில்லை என அந்த சங்கத்தின் தலைவர் உபுர் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாளொன்றில் 3000திற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 150திற்கும் அதிகமான கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமையானது, எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.

இவ்வாறான நிலையில், நேற்றைய தினம் (13) அரசாங்கம் புதிய பயணக் கட்டுப்பாடுகள் எதையும் அமுல்படுத்தவில்லை என கூறிய அவர், அவ்வாறான தீர்மானங்களை எடுக்குமாறு இனி தாம் அரசாங்கத்திடம் கோர போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து, வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

திங்கட்கிழமை (16) முதல் தமக்கு தாமே பயணக் கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு, இந்த நாட்டிலிருந்து கொவிட் வைரஸை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்குமாறும் சங்கத்தின் தலைவர் உபுர் ரோஹண கோரிக்கை விடுக்கின்றார். -தமிழன்.lk-

Previous articleபணிக்கு செல்வோருக்கு இலங்கை வெளிநாட்டு பணியகத்தின் செய்தி
Next articleஇன்றைய வைத்தியர்கள் Today Doctors – Sunday, August 15