பதுக்கிய பொருட்கள் எப்போது வெளியேறும்?

ஏதாவது ஒரு பொருளுக்கு, விலையை அதிகரிக்க வேண்டுமென்ற தீர்மானம், சம்பந்தப்பட்ட தரப்புகளால் எடுக்கப்படுகின்ற போதே, அந்தப் பொருட்களை மறைத்து, நுகர்வோரை திணறடிக்கும் விளையாட்டு, இலங்கையில் ஒரு வழக்கமாகக் காலம் காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இது வர்த்தகர்களின் வர்த்தக உத்தியாக இருந்தாலும், பாதிப்பு என்பது நுகர்வோரைத் தவிர எவருக்கும் இல்லை.

அந்தவகையில், நாட்டில் உரம், சமையல், எரிவாயு, அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறை என நீண்டு செல்லும் பட்டியலில், பால்மாவும் தற்போது இடம்பிடித்துள்ளது.

“அதிக செலவில் பொருட்களை இறக்குமதி செய்கிறோம்; எனவே, இறக்குமதி செலவைக் கட்டுப்படுத்த, பொருட்களின் விலையை அதிகரித்தேயாக வேண்டும்” என்று ஒற்றைக்காலில் நின்று, தாம் நினைத்தைச் சாதித்து விடும் வர்த்தக சமூகம், தாம் பதுக்கிய பொருள்களுக்குக் கொள்ளை இலாபத்தை ஒரே நாளில் ஈட்டிவிடுவர்.

ஆனால், பதுக்கினாலும் விலை அதிகரித்தாலும் பாதிக்கப்படும் ஒரே தரப்பு நுகர்வோர் மாத்திரமே. இதற்கமைய, இலங்கையில் கடந்த சில வாரங்களாக பல அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், இரண்டு பொருட்கள் குறித்தே அதிகமாகப் பேசப்பட்டன; இன்றும் பேசப்படுகின்றன.

அதாவது, சமையல் எரிவாயு, பால்மா ஆகியவற்றுக்கான தட்டுப்பாடு ஆகும். (தட்டுபாடு என்று கூறுவதை விட பதுக்கல் என்பது சாலப் பொருந்தும்) இதனால், நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்புக்கு, அரசாங்கம் அனுமதியளித்ததால், இனிமேல் சமையல் எரிவாயு, தயக்கம் இல்லாமல் வெளியே தலைகாட்டும் என்பதால் அதைவிடுத்து, பால்மாப் பிரச்சினைக்குச் செல்லுவோம்.

உலக வர்த்தக சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு, கப்பல் கட்டணம் அதிகரிப்பு, டொலருக்கான பற்றாக்குறை என்பவற்றைக் காரணம் காட்டி பால்மா இறக்குமதியாளர்கள், தற்போது 945 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 1,300 ரூபாய்க்கும் 380 ரூபாய்க்கு விற்பளை செய்யப்படும் 400 கிராம் பால்மாவை 495 ரூபாயாகவும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தாலும் அரசாங்கம் இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை.

இதனால், பால்மா இறக்குமதியை 70 சதவீதமாகக் குறைக்க தீர்மானம் எடுத்த மறுகணமே, சாதாரண பெட்டிக்கடை தொடக்கம் பல்பொருள் அங்காடிகளின் இறாக்கைகளை அழகுபடுத்திய பால்மாக்கள் காணாமல் போய்விட்டன.

ஆனால், “துறைமுகங்கள், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, இந்த இக்கட்டான நிலையில், பால்மா விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப் போவதில்லை” என நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சும் வர்த்தக அமைச்சும் பிடிவாதம் பிடித்து வருகின்றன.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

இவ்வாறு, பால்மாத் தட்டுப்பாடு தொடர்பில், சிறு குழந்தை கூட அறிந்திருக்கும் நிலையில், கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர், நாட்டில் பால்மாதட்டுபாடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் வினவியதற்குஅமைச்சரவை இணைப்பேச்சாளர்களுள் ஒருவரான ரமேஸ் பத்திரண, அவ்வாறான எந்தவொரு தகவலும் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என கூறியமை வேடிக்கையாகவே பார்க்கப்பட்டு இதை வைத்து மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் உலாவந்தன.

“அந்நிய செலாவணி பற்றாக்குறையே இந்த நெருக்கடிக்குக் காரணம். எனவே, வெகு சீக்கிரமாக அந்நிய செலாவணி நெருக்கடிக்கு, தீர்வைக் கண்டுபிடிப்பது அவசியம்”

இதாவது பரவாயில்லை! சில நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் அதிகளவு பொருட்களை அல்லது குறிப்பிட்ட சில பொருட்களை கொள்வனவு செய்தால் மாத்திரமே, ஒரு பக்கட் பால்மா தரப்பட்டதாகவும் அறியக்கிடைக்கின்றது. எனவே, இந்தப் பால்மா தட்டுப்பாடு தேநீர் பிரியர்களை விட குழந்தைகளையே பெருமளவில் பாதித்துள்ளது.

பெரும்பாலும் தொழிலுக்குச் செல்லும் தாய்மாரின் குழந்தைகளின் பசியை, பால்மாக்களே போக்குகின்றன. ஆனால், இன்று அதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இரு தரப்பினரின் பிடிவாதத்துக்கு மத்தியில், அரசாங்கம் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான இறக்குமதி வரியை முழுமையாகக்கியதுடன், தற்போதுள்ள பால்மா இறக்குமதிக்கான வரியைத் திருத்தம் செய்வதன் மூலமோ அல்லது, வேறு பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமோ போதியளவு பால்மாவை உள்ளூர் சந்தையில் விநியோகிப்பதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி அமைச்சருக்கு அதிகாரத்தையும் வழங்குவதாக அமைச்சரவை தீர்மானத்தை அறிவித்தது.

ஆனால், “இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்பட்டாலும் நாம் கோருவது விலை அதிகரிப்பையே; ஏனெனில், ஒரு கிலோகிராம் பால்மாவை இறக்குமதி செய்ய 1,200 ரூபாய் செல்லும் போது, 900 ரூபாய்க்கு எவ்வாறு விற்பனை செய்வது” என, பால்மா இறக்குமதியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இலங்கையின் அன்றாட பால்மா நுகர்வு 200 தொன் என்பதுடன், மாதம் 6,500 தொடக்கம் 8,000 தொன் வரை தேவைப்படுகின்றது. இதற்காக வருடாந்தம் 360 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படுகின்றது. இவ்வாறான நிலையில் தான், தேசிய பால் உற்பத்தி குறித்து, சகலரிடத்திலும் கேள்வி எழுகின்றது. எதற்காக இத்தனை டொலரைச் செலவிட்டு, பால்மா இறக்குமதி செய்ய வேண்டும்? இந்தப் பணத்தில் தேசிய பால் உற்பத்தியை ஊக்குவித்தால், பால்மா இறக்குமதிக்காக அதிகம் செலவிடும் நிதியை சேமிக்க முடியாதா? என்பது நியாயமான கேள்விதான்.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

“பரவாயில்லை பசுப்பால் குடியுங்கள். ‘சூன்பான்’ வாகனம் போல, காலையிலேயே உங்கள் வீடுகளுக்கு பால் வாகனம் வரும்” என அமைச்சர் ஒருவர் நக்கலடித்திருந்தார். அவ்வாறு அந்த அமைச்சர் கூறுவதைப்போன்று, நாட்டின் பசுப்பாலுக்கான தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, தேசிய பால் உற்பத்தி இடம்பெறுகிறதா என்று, அந்த அமைச்சரிடம் தான் வினவ வேண்டும்.

ஏனெனில், எமது நாட்டில் நாளொன்றில் தனிநபர் பால் நுகர்வு 200 மில்லிலீற்றராகக் காணப்படும் நிலையில், தேசிய பால் உற்பத்தி 40 சதவீதமாக உள்ளது. மிகுதி 60 சதவீதம், இறக்குமதி செய்யப்படும் பால்மா மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றது. “எமது தேசிய பால் உற்பத்தி 40 சதவீதமாகவே காணப்படுகின்றது. இவற்றை 100 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். அப்போதே நாட்டில் பாலுக்கான தன்னிறைவு காணப்படும். அதேவேளை, பால்மா இறக்குமதியையும் நிறுத்த முடியும். பாலில் தன்னிறைவு காணவேண்டும்; அவ்வாறு, பாலில் தன்னிறைவு காணவேண்டுமாயின் 2-3 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதுவே, எமது இலக்கு” என, கால்நடை வளம், விவசாய மேம்பாடு, இராஜாங்க அமைச்சர் டீ.பீ. ஹேரத் அறிவித்தாலும், நுகர்வோரின் தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வு தான் என்ன?

இராஜாங்க அமைச்சர் டீ.பீ. ஹேரத் கூறுவதைப் போன்று, தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமெனில், அதற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் கால் நடை வளர்ப்பு மிகவும் அருகி வருகின்றது. முன்பெல்லாம், மலையகத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் ஆடு, மாடு என கால்நடைகளை வளர்த்து வந்தனர். தமது பால் தேவையை இவர்களே பூர்த்தி செய்துகொண்டனர். இவர்கள் அப்போதைய ஆட்சியாளர்களால் ஊக்குவிக்கப்பட்டனர். ஆனால், இன்று தோட்டப்புறங்களில் கால்நடைகள் வளர்ப்பதற்காகப் பட்டிகளை அமைத்தாலே, அதற்கு எதிராக தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், எதற்காக வம்பு என, தோட்ட மக்களும் பால்மாவுக்கு அடிமையாகி, இன்று வர்த்தக நிலையங்கள் முன்பாக, ஒரு பக்கட் பால்மா கிடைக்காதா எனக் காத்துக்கிடக்கின்றனர்.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

இதனால்தான், இன்றைய கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையில், பேசாமல் தேநீரை நிறுத்திவிட்டு, கொத்தமல்லி, இஞ்சி போட்ட பானங்களை அருந்த பழகிக்கொள்வது சிறந்ததென, சிலர் மாற்றுவழியையும் யோசிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், மருந்தும் விருந்தும்’ அதிகமானால் சிக்கலாகிவிடும். அது வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும் அல்லவா?

எனவே தான், இந்தப் பிரச்சினைக்கான தீர்வை, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் வணிக பீடத்தின் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க இவ்வாறு முன்வைத்துள்ளார். “இன்று தலைதூக்கியுள்ள பால்மா பிரச்சினைக்கான அடிப்படைப் பிரச்சினை, கடந்த காலம் முதல் தொடர்ச்சியாகக் காணப்படும் அந்நிய செலாவணி நெருக்கடியாகும். டொலர் கொடுத்து பால்மாவை, இலங்கைக்கு இறக்குமதி செய்ததும், அந்த டொலர் மூலம் கொண்டு வரப்படும் பொருட்களின் விலை, தேசிய சந்தையில் அதிகரித்துக் காணப்படுகின்றது. காரணம் இதற்கான செலவு அதிகமாகும். குறிப்பாக, அந்நிய செலாவணி பற்றாக்குறையே இந்த நெருக்கடிக்குக் காரணம். எனவே, வெகு சீக்கிரமாக அந்நிய செலாவணி நெருக்கடிக்கு, குறுகிய அல்லது நீண்டகால தீர்வைக் கண்டுபிடிப்பது அவசியம். இல்லையெனில், நாம் மேலும் பல பொருள்களின் நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரடும்” என எச்சரித்துள்ளார்.

ஆகவே, இவரின் எச்சரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்ப்பதே தற்போது தலைத்தூக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வாகும். ஆனாலும், மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில் விலை அதிகரிப்பு என்ற நியாயமற்ற கோரிக்கைக்கு இணங்கமாட்டோம் என வர்த்தகத்துறை அமைச்சர் கூறுவது, நுகர்வோருக்கான நிவாரணமாக அமைந்தாலும், சந்தையில் பால்மா இன்மையானது நுகர்வோருக்கே பாரிய அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், செலவுகள் அதிகரிக்கும் போது விலையேற்றமும் இயல்பானதே. ஆகவே, இரண்டும் ஒன்றிலொன்று தங்கியிருப்பதால் எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் எடுப்பதே சிறந்தது.

மகேஸ்வரி விஜயனந்தன் (தமிழ் மிற்றோர் -14-8-21)