இஸ்ரேல் மீதான தாக்குதல், ஈரான் முற்றுகையிடப்படுமா ?

மேற்காசியா அரசியல் ஈரான், இஸ்ரேல் முரண்பாட்டினால் நெருக்கடிமிக்கதாகவே காணப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையில் பிராந்தியப் போட்டியொன்று அதிகரித்துவருகிறது. மேற்காசியாவில் ஈரானா இஸ்ரேலா என்ற போட்டித் தன்மை தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. ஈரானின் அணுவாயுத தயாரிப்பினை பலதடவை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்கும் இஸ்ரேலின் எண்ணைக் கப்பல்கள் மீதும் எல்லைகள் மீதும் இஸ்ரேலின் அணுவாயுத நிலையம் மீதும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களும் ஹமாஸ் போராளிகளும் தாக்குதல் நிகழ்த்தி வரும் நிலையொன்றை அவதானிக்க முடிகிறது.

இவ்வாறு மேற்காசியப் பிராந்தியத்தில் ஈரானுக்கும் இஸ்ரேலும் இடையில் அதிகரித்துவரும் பதற்றத்தின் மத்தியில் 29.07.2021 இல் இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான கப்பல் மீது ஆளில்லாத விமானமான ரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இக்கட்டுரையும் இஸ்ரேல், ஈரானுக்கிடையில் புதிதாக ஏற்பட்டுள்ள பதற்றம் பற்றிய தேடலாக உள்ளது.

மேற்கு இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள ஹார்மூஸ் நீரிணை பகுதியான ஜலசந்தி உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்தின் மையமாக விளங்குகிறது. இது ஈரானுக்கும் ஐக்கிய அரபுக்கும் இடையிலே அமைந்துள்ள குறுகிய கடல் பாதையாகும். உலக நாடுகளின் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் வர்த்தக ஏற்றுமதிக்கான விநியோகப் பாதையாகவும் இது விளங்குகின்றது. நாளொன்றுக்கு சராசரியாக 21 மில்லியன் பரல் எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் பகுதியாகும். இப்பாதை ஈரானின் அதிக செல்வாக்குப் பெற்ற கடல் பகுதியாக உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக ஹார்மூஸ் ஜலசந்தியில் சர்வதேச நாடுகளின் கொள்கலன் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றது. இப்பகுதியில் நிகழும் தாக்குதலுக்கு பின்னால் ஈரானும் இஸ்ரேலும் இருப்பதாக பரஸ்பரம் இரு தரப்பாலும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் ஓமானின் எல்லையோரத்தில் அமைந்துள்ள மாசிரா தீவு அருகே மிதந்து கொண்டிருந்த மெர்சிர் ஸ்ட்ரீட் என்ற எண்ணெய் கப்பல் மீது கடந்த 29ம் திகதி தாக்குதல் நடத்தப்படுள்ளது.

பிரித்தானியாவில் இயங்கிவரும் ஸோடியாக் மொரிடைம் அமையத்தின் எம்.வி. மெர்சிர் ஸ்ட்ரீட் என்று அழைக்கப்படும் கப்பல் ஓமான் நாட்டின் தலைநகர் மாஸ்கட்டிலிருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இத் தாக்குதலில் இரு பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் பிரிட்டன் மற்றும் ருமோனியா நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் இஸ்ரேலைச் சேர்ந்த ஏயல் ஓஃப் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது. இதுவே தற்போது இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமான முறுகலுக்கு காரணமாகும்..

இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சயீது காதிப் ஸாதே ஊடகத்திற்கு தெரிவிக்கும் போது எம்விமெர்சிர் ஸ்ட்ரீட் எண்ணெய்க் கப்பல் மீது 29.07.2021 நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று கூறுவது அடிப்படை முகாந்திர மற்ற குற்றச்சாட்டு. இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது இஸ்ரேலுக்கு ஒன்றும் புதிதல்ல. வளைகுடா கடல் பகுதியில் இஸ்ரேல் செயல்படுவதற்கு காரணம் அவர்களே மெர்சிர் ஸ்ட்ரீட் எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலுக்கும் காரணமானவர்கள் என்று தெரிவித்தார்.

இதே நேரம் இஸ்ரேல் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நாஃபடாலி பென்னட் கூறிய போது ”எம்.வி. மெர்சிர் ஸ்ட்ரீட் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதற்கான பொறுப்பிலிருந்து தப்ப ஈரான் கோழைத்தனமாக முயற்சிக்கிறது. அவர்கள் மறுத்தாலும், அந்த தாக்குதலை ஈரானே நிகழ்த்தியது என்பதற்கு இஸ்ரேலின் உளவுத்துறையிடம் ஆதாரங்கள் உண்டு. இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம் ஈரான் மிகப் பெரிய தவறை இழைத்துள்ளது என்பதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான பதிலை இஸ்ரேல் தனது பாணியில் விரைவில் தெரிவிக்கும். ஈரானின் இந்த அராஜக நடவடிக்கைகளால் இஸ்ரேலுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை. அதனால் உலகின் சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து சுதந்திரத்தால், சர்வதேச வணிகத்திற்கே ஆபத்து ஏற்பட்ட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.

இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் யாயிர் ல்பீட் வெளியிட்ட அறிக்கையில் எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலுக்கு ஈரானின் பயங்கரவாதமே அடிப்படைக் காரணமாகும். ஈரான் இஸ்ரேலுக்கு மட்டும் பிரச்சினையாக விளங்கவில்லை. மாறாக ஈரானின் பயங்கரவாதச் செயற்பாடுகள் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை ஈரானிய பயங்கரவாதத்தின் செயற்பாடுகளினை பார்த்துக் கொண்டு நாம் ஒருபோதும் அமைதியாக இருக்க முடியாது. ஆனால் இத் தாக்குதலுக்கு பின்னர் உலகம் ஈரானுக்கு எதிராக அணி திரள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.. அமெரிக்கா இத் தாக்குதலைக் கண்டித்ததுடன் உடனடியாக எந்த பதில் தாக்குதலையும் மேற்கொள்ளப் போவதில்லை என பென்டகன் அறிவித்துள்ளது. பிரித்தானியா வெளியுறவுத் துறை தாக்குதலைக் கண்டித்ததுடன் கவலை வெளியிட்டுள்ளது. மேலும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் சர்வதேச கடல் பரப்பில் கப்பல்கள் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதே நேரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை இஸ்ரேலின் கப்பல் மீதான தாக்குதலை கண்டித்துள்ளது. இந்தியாவும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள பாதுகாப்பு சபை தலையிட வேண்டும் எனக்கோருவதாக தெரிவித்துள்ளது. இதனை விரிவாக நோக்குவது அவசியமாகும்.

முதலாவது ஈரானுக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பு ஏற்படுத்தும் நகர்வுகளை மேற்குலகம் இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதனைக் காணமுடிகிறது. இஸ்ரேல் ஈரான் பயங்கரவாத நாடு என்பதை சுட்டிக் காட்டுவதுடன் ஈரானின் நடவடிக்கைகள் அனைத்தும் உலக நாடுகளுக்கு ஆபத்தானது என்பதை இஸ்ரேல் காட்டுவதற்கு தவறவில்லை. அதனூடாக உலக நாடுகளை ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் அணிதிரட்ட முயலுகிறது.

இரண்டாவது ஈரானை அடிபணிய வைக்கும் உத்தியொன்றை மேற்குலக நாடுகள் ஆரம்பித்துள்ளன. அதாவது முறிந்து போன ஈரான் அமெரிக்க அணுவாயுத உடன்பாட்டை மீளச் சரிசெய்ய அமெரிக்கா திட்டமிடுகிறது. அமெரிக்கா, ஈரானுடனான அணுவாயுத உடன்பாட்டிலிருந்து வெளியேறியது ஈரானுக்கு இலாபகரமானது என இஸ்ரேலின் தற்போதைய ஆட்சியாளரும் அமெரிக்கர்க ளும் கருதுகின்றனர். அதனால் மீளவும் அணுவாயுத் உடன்பாட்டை தொடருவதற்கு அமெரிக்கா முயலுகிறது. அத்தகைய தொடர்ச்சி அதே உடன்பாடாக இருக்க வேண்டும் என்பதிலும் அமெரிக்கா கவனம் கொள்கிறது. இதனால் உலகளாவிய நெருக்கடியை ஈரானுக்கு ஏற்படுத்தி அதனை அடிபணிய வைக்க மேற்கு இஸ்ரேல் விரும்புகின்றது.

மூன்றாவது ஈரானின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சியின் தீவிரப் போக்கானது ஈரானது அணுவாயுத விருத்தி மட்டுமன்றி ஈரானிய இராணுவத்தின் வளர்ச்சிக்கானதாக அமைந்துவிடும் என்ற குழப்பத்தை மேற்குலகத் திற்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஈரானுக்கு எதிரான நகர்வுகளை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்துவதன் மூலமே அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதை இஸ்ரேலும் அமெரிக்காவும் கருதுகின்றன.

நான்காவது ஈரானினுக்கு எதிரான வாய்ப்புக்களை நோக்கி அமெரிக்கா செயல்பட முனைகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பின்பு ஏற்படவுள்ள நெருக்கடி ஒருபக்கம் அமைய மறுபக்கத்தில் ரஷ்யா சீனாவின் மேற்காசியா நோக்கிய விஸ்தரிப்பானது மேற்குக்கும் இஸ்ரேலுக்கும் அதிக நெருக்கடியை தந்துள்ளது. இதனால் ஈரானின் நகர்வுகளை முதன்மைப்படுத்திக் கொள்ளவும் ஈரானின் ஆதரவுக் குழுக்கள் நிகழ்த்தும் தாக்குதல்களை ஈரான் மீதும் திணித்துவிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கு வாய்ப்பாக கருதி செயல்பட விரும்புகிறது.

ஏற்கனவே சிரியாவிலுள்ள ஐஎஸ் அமைப்பு மீதான தாக்குதல்களை அமெரிக்கா பயங்கர வாதத்திற்கு எதிரான தாக்குதல் எனக் கூறிக்கொண்டு விமானத் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. ஐந்தாவது மேற்காசியாவில் வளர்ந்துள்ள தொழில் நுட்ப ஆயுதங்களின் பெருக்கமும் ரஷ்யாவின் ஆயுதங்களும் இஸ்ரேலுக்கும் மேற்குக்கும் ஆபத்தான அரசியலாக மாறியுள்ளது.

எனவே இதனை எதிர் கொள்வதற்கு கூட்டுப் பாதுகாப்பு பொறிமுறைகள் மேற்குலகத்திற்கு அவசியமாகிறது. குறிப்பாக துருக்கி, ஈரான் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் பெருக்கமடைந்துள்ள ஆளில்லா விமானங்களது தொழில் நுட்பம் மேற்காசியாவை அதிரவைத்துள்ளது. இவை அனைத்தும் மேற்குலகத்திற்கு எதிராக மாறுமாயின் மேற்கினதும் இஸ்ரேலது இருப்பும் நெருக்கடியானதாக அமைய வாய்ப்புள்ளது.

எனவே இஸ்ரேலின் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல் ஈரானால் மேற்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்துவதில் காணப்படும் தாமதத்தை விட ஈரான் மீது குற்றச்சாட்டுகளை ஏற்படுத்துவதன் மூலம் ஈரானுக்கும் அதன் ஆட்சிக்கும் நெருக்கடியொன்றை சாத்தியப்படுத்த முடியும் என இஸ்ரேலும் மேற்குலக நாடுகளும் கருதுகின்றன. இத்தகைய தாக்குதல்கள் பல நிகழ்ந்தாலும் தற்போது இதன் முக்கியத்துவம் முதன்மையானதாக அமைந்துள்ளது. இதனை ஈரான் எவ்வாறு அணுகப் போகிறது என்பதே தற்போதைய கேள்வியாகும்.

அமெரிக்க பாதுகாப்பு துறைப் பேச்சாளர் நிட் பிறைஸ் குறிப்பிடும் போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நலன்களையும் விட அமெரிக்காவின் பங்காளிகளதும் பாதுகாப்பு முக்கியமானது எனக்கருதுகிறது. அதனை எதிர்கொள்ளவும் முன்னோக்கி நகரவும் தயாராக உள்ளது என்ற செய்தியை ஈரானிய ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துகிறோம் எனக் குறிப்பிட்டமை கவனிக்கத்தக்கது. அதே நேரம் சீனாவும் ரஷ்யாவும் ஈரானின் நெருக்கமான நட்பு பங்காளிகள் என்பதை தவிர்த்துவிட்டு இவ்வரசியலை மதிப்பிட முடியாது. (பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் – யாழ். பல்கலைக்கழகம்)

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page