டெல்டா, புதிய வகை கொவிட் -19 வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள்‌ செயற்படுமா?

கேள்வி: கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட பின்னர் கூட சிலருக்கு தொற்று ஏற்பட்டதாக அறியக் கிடைக்கிறது, இந்த தடுப்பூசிகள் உண்மையில் தொழிற்படுகின்றனவா? இவற்றைக் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டுமா?

பதில்: இந்த கேள்விக்கு சரி யான பதிலை தெரிந்து கொள்ள வேண்டுமானால் தடுப்பூசிகள் எவ்வாறு தொழிற்படுகின்றன என்பது பற்றிய சரியான விளக்கத்தை நீங்கள் அறிந்திருத்தல் வேண்டும். எந்த தடுப்பூசியும் நோய்க்கு மருந்து கிடையாது, உதாரணமாக கொரோனா வைரஸ் உடலினுள் நுழையும்போது அதனை இல்லாமல் செய்யும் மருந்து எதுவுமே தடுப்பூசியில் சேர்க்கப்படுவது இல்லை. தடுப்பூசி எவ்வாறு தொழிற்படுமெனில், தடுப்பூசியின் உள்ளடக்கமாக நாம் ஒருவருக்கு வழங்குவது உயிரிழந்த கொரோனா வைரஸ் அல்லது கொரோனா வைரஸின் உருவ அமைப்பை ஒத்த இன்னும் ஒரு வைரஸ் அல்லது கொரோனா வைரஸில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பாகம் போன்றவற்றில் ஒன்றையே.

இவற்றை உடலினுள் செலுத்தித் கொள்ளும்போது மனித உடல் உண்மையான கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருப்பதாக எண்ணி அந்த வைரஸுக்கு எதிராக தொழிற்பட்டு அதனை அழிப்பதோடு அந்த வைரஸ் மீண்டும். தாக்காதவாறு தனது நோயெதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி ஒரு பாதுகாப்புப் பொறிமுறையை அமைத்துக் கொள்ளும்.

இவ்வாறு உருவாகும் பாதுகாப்பு பொறிமுறையை தாண்டி தடுப்பூசிபெற்ற ஒருவருக்கு மீளவும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படும். இவ்வாறே தடுப்பூசிகள் சாதாரணமாக தொழிற்படுகின்றன. ஒரு சிலரில் இந்த எதிர்கட்டமைப்பு உருவாவதில் பிரச் சினைகள் ஏற்படலாம். இது தனிப்பட்ட ஒருவரின் உடல் அமைப்பு சம்பந்தப்பட்டது,

எனவேதான், நாங்கள் இத்தகைய தனிப்பட்ட எல்லோரையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு தடுப்பூசியும் எத்தனை சத வீதமான மக்களில் சரியான கட்டமைப்பை உருவாக்கும் என கணித்து இருக்கிறோம். உதாரணமாக பைசர் இரண்டு தடுப்பூசியும் பெற்றுக் கொண்ட ஒரு வருக்கு 95 சத வீதமானோரில் பாதுகாப்புக் கட்டமைப்பு உருவாகும், அதாவது 100 பேர் செலுத்தியிருந்தால் 95 பேருக்கு வைரஸ் மீண்டும் தாக்காது. அதேபோல் கொவிசேல்ட் தடுப்பூசியை எடுத்துக் கொண்டால் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட ஒருவர் 70 சத வீதம் தொடக்கம் 80 சதவீதம் பாதுகாக்கப்படுவார்.

அதாவது நூறு பேர் தடுப்பூசிகள் பெற்றிருந்தால் அவர்களில் சராசரியாக 75 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படாது. இவ்வாறுதான் தடுப்பூசி தொழிற்படுகிறது. இந்த கட்டமைப்பு பொறிமுறை உடலில் உருவாக்கப்படுவதற்கு சிறிது காலம் எடுக்கும் சராசரியாக தடுப்பூசியை போட்டு மூன்று வாரங்களாவது உடல் எடுத்துக் கொள்ளும். அதாவது இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்ட பின்னர் சுமார் மூன்று வாரங்களிலேயே ஒருவர் பூரண எதிர்ப்பு சக்தியை பெற்றுக்கொள்வார். இதற்கு இடையிலும் ஒருவருக்கு தொற்று ஏற்படலாம். ஒரு சிலரில் மூன்று வாரத்தின் பின்னர் கூட தொற்றுக்கள் மேற்குறிப்பிட்ட விதத்தில் ஏற்பபடலாம்.

கேள்வி: தடுப்பூசி ஏற்கனவே பெற்றுக் கொண்ட ஒருவருக்கு கொரேனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது அவர்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துமா?

பதில்: இல்லை. இவர்களின் உடல் பூரணமான தடுப்பு கட்டமைப்பை உருவாக்காவிட்டாலும் பகுதி அளவிலேனும் ஒரு கட்டமைப்பை உருவாக்கித்தான் இருக்கும். எனவே, தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் ஒரு தொற்று ஏற்பட்டாலும் அவர்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை குறைவு. அவர்களுக்கு சுவாசப்பையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான அளவோ குறைவாகத்தான் இருக்கும். இது பொதுவாகவே தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களை விட தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும்.

கேள்வி: கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. இது பற்றி குறிப்பிட முடியுமா?

பதில்: இலங்கையைப் பொறுத்தவரை கர்ப்பிணிகளுக்கு இரண்டு விதமான முறைகளில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. ஒன்று ஒரு கர்ப்பிணி ஏனைய பாதிப்புகள் உட்பட்டு ஆபத்து கூடியவராக இனங்காணப்பட்டால், அதாவது ஒரு கர்ப்பிணித் தாய் ஒருவர் உயர் குருதியமுக்கம், நீரிழிவு, இதய நோய்கள், 35 வயதுக்கு மேற்பட்டவராக அல்லது வேறொரு நோய்களுக்கான சாத்தியக்கூறு உள்ளவராக இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றது. அதேபோன்று முன்களபணியாளராக இருக்கும் கர்ப்பிணிகளுக்கும் வயது வேறுபாடு இன்றி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த தடுப்பூசிகளும் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஏனைய மருந்துகளைப் போலவேதான் முதல் மூன்று மாதங்களினுள் வழங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து அதாவது நான்கு மாதங்களின் பின் வழங்கப்படுகின்றது.

இவ்வாறு வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உயிர் ஆபத்துக்களை குறைக்கலாம் என எதிபார்க்கப்படுகிறது.

கேள்வி: டெல்டா உட்பட புதிய புதிய வேரியண்ட்கள் உருவாகின்றனவே? இப்படியான உருமாற்றங்களுக்கு எதிராக தடுப்பூசிகள் தொழிற்படுமா?

பதில்: வைரஸ் உருமாற்றமடையும் என்பது சகலரும் அறிந்த உண்மை. எனவே, புதிய உருமாற்றங்கள் என்பது முன்கூட்டியே அனுமானிக்கப்பட்டே தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன. உருமாறிய வைரஸ்களுக்கு பரவும் மற்றும் அதிக பாதிப்பை உண்டுபண்ணும் ஆற்றல் அதிகம் இருப்பது உண்மை. அப்போது டெல்டா போன்ற வைரஸ்கள் ஏற்கனவே தடுப்பூசி மூலம் மனிதனில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பை தாண்டியும் ஒரு சிலரைத் தாக்கும் வல்லமை கொண்டது. ஆனால் தடுப்பூசிகள் என்பது அவற்றின் ஏற்படும் பாதிப்பை பெருமளவில் குறைப்பதோடு பரவலின் அளவைக்கூட குறைக்கின்றன. எனவே, தடுப்பூசிகளே இந்த உருமாறிய வைரஸிலும் இருந்து பாதுகாப்பை வழங்குகிறது.

கேள்வி: தடுப்பூசிகள் இலங்கையில் ஒரு சில பகுதிகளுக்கு வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன சில பகுதிகள் இன்னும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவில்லை. இதற்கான உண்மையான காரணம் என்ன?

பதில்: இதற்கு காரணங்களாக இருப்பது நோய் எந்தளவில் ஆரம்பத்தில் அந்த பகுதிகளில் பாதித்தது என்பதை அடிப்படையாகக் கொண்டே அந்தப் பகுதிகள் முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்டன. ஆனால் தற்போதைய நிலையில் பாதிப்பு தடுப்பூசிகள் வழங்கப்படாத பகுதி களிலும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அதனடிப்படையில் பெறப்படும் தடுப்பூசிகள் அந்தந்த பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுவதற்கான அதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவருக்கும் குறிப்பாக ஆபத்தான பகுதிகளில் உள்ள அனைவருக்கும் விரைவில் தடுப்பூசிகள் கிடைக்கும் என்பதே உண்மை.

வைத்தியர் – ச.லவப்பிரதன் (பிராந்திய வைத்திய அதிகாரி – அம்பாறை)

Check Also

உடலுறவு வேண்டாம்; செல்போனே போதும்

இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் …

You cannot copy content of this page