இளவயது முஸ்லிம் திருமணங்களுக்கு தடை, பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி வகிப்பதில் சிக்கலில்லை – அலி சப்ரி

நாட்டின் தலைவராகவும், முப்படைகளின் தலைவராகவும், அமைச்சரவையின் தலைமையையும் கொண்டிருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சினை தன்வசம் கொண்டிருப்பதிலோ பாதுகாப்பு அமைச்சராக பதவியில் நீடிப்பதிலோ எவ்விதமான சட்ட முரண்பாடுகளும் இல்லை என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி திட்டவட்டமாக தெரிவித்தார். 

நீதி அமைச்சராக நியமனம் பெற்றதன் பின்னர் அடுத்து முன்னெடுக்கவுள்ள தனது செயற்பாடுகள் மற்றும் தான் கொண்டிருக்கும் விசேட திட்டங்கள் தொடர்பில் கேசரிக்கு பிரத்தியேகமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவ்விடயங்கள் வருமாறு, 

நீதித்துறை மறுசீரமைப்பு

நாட்டில் நீதித்துறை மறுசீரமைப்பு சம்பந்தமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசப்படுகின்றன. குறிப்பாக, வழக்கு விசாரணைகளில் நீதிமன்றங்களில் காணப்படும் தாமதங்கள், வழக்குகள் தேக்கமாக இருத்தல் போன்ற தொடர்பாக விசேட கவனம் எடுக்க வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் நீதிமன்றக் கட்டமைப்புக்களில் பணியாற்றிய அனுபவத்தினை நான் கொண்டிருக்கின்றேன். ஆகவே எந்தெந்த மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதையும் உணர்ந்து கொண்டுள்ளேன். அதற்கமைவாக அடுத்த கட்டமாக நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன். 

ஜனாதிபதியும், பிரதமரும் என்மீதான நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே வினைத்திறனான நீதித்துறை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளேன். மேலும் நீதித்துறையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன். 

19ஆவது திருத்தச்சட்டம்

19ஆவது திருத்தச்சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் பொதுவெளியில் கலந்துரையாடப்பட்டுள்ளன. 19ஆவது திருத்தச்சட்டம் அவசரஅவசரமாக தனிப்பட்ட காரணங்களுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்திருத்தம் காரணமாக அரசியலமைப்பு நடைமுறையில் பல்வேறு நெருக்கடிகள் காணப்படுகின்றன. இதனை சாதாரண பொதுமக்களும் உணர்ந்துள்ளார்கள். ஆகவே 19இல் சர்ச்சைகளை உருவாக்குகின்றன அல்லது குழப்பகரமான விடயங்களை கொண்டிருக்கின்ற ஏற்பாடுகளில் உடனடியான திருத்தங்கள் அவசியமாகின்றன. அதுதொடர்பில் வரைபுகள் தயாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பவுள்ளன. மேலும் புதிய அரசியலமைப்பு பற்றி தேர்தல் மேடைகளில் பேசப்பட்டது. அதுகுறித்து ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை முடிவுகளை எடுக்கின்ற பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன

ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சும்

அரசியலமைப்பில் 19ஆவது திருத்தச்சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சுப்பதவியை வகிக்க முடியுமா என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன குறித்து கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர், அரசியலமைப்பின்  மூன்றாம், நான்காம் சரத்துக்களை பார்க்கின்றபோது ஜனாதிபதி நாட்டின் தேசியப் பாதுகாப்பு விடயங்களுக்கு பொறுப்பானவராக உள்ளமை தெளிவாகின்றது. 

அத்துடன் அவரே முப்படைகளினது தலைவராகவும் உள்ளார். அமைச்சரவையின் தலைவராகவும் உள்ளார். ஆகவே அவர் அப்பதவியை வகிப்பதிலோ பாதுகாப்பு அமைச்சினை தனக்கு கீழ் வைத்திருப்பதிலோ எவ்விதமான சிக்கல்களும் இல்லை. மேலும் 19ஆவது திருத்தின் 51ஆவது சரத்தினை மையப்படுத்தி குழப்பமடைய வேண்டிதில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயங்களில் அவதானமாகவும், கூடிய கரிசனையும் கொண்டிருக்க வேண்டும் என்றார். 

முஸ்லிம் விவாக, விவகரத்து சட்டம்

முஸ்லிம் சமூகத்தினுள் காணப்படும் இளவயது திருமணங்களை தடைசெய்ய வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. அதனை முஸ்லிம் சமுகத்தினர் பெரிதும் விரும்புகின்றார்கள். கடந்த காலத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்காக முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமயிலான குழுவினர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை தயாரித்துள்ளனர். அதேபோன்று இந்தச் சட்டத்தினை திருத்துவதற்கான வரைபும் தயாரிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே மிக விரைவாக முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் உரிய திருத்தங்களுடன் நிறைவேற்றப்படவுள்ளது. இதில் முஸ்லிம் சமுகத்தின் ஏற்புடன் அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது நிறைவேற்றப்படவுள்ளது. 

பயங்கரவாத தடைச்சட்டம்

நான் அறிந்தவரையில் பயங்கரவாத தடைச்சட்டம் சம்பந்தமாக இதுவரையில் அரச தரப்பு சார்ந்து எவ்விதமான முன்மொழிவுகளும் காணப்படவில்லை. எனினும் அமைச்சரவை கூடியபின்னர் அவ்விடயம் தொடர்பில் அவசியம் ஏற்படும் பட்சத்தில் கவனம் செலுத்தப்படும் என்றார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters