சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சஜித்

பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் தேசிய பட்டியல் தொடர்பில் காணப்பட்ட சர்ச்சைக்கு அதன் தலைவர் சஜித் பிரேமதாச முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தேசிய பட்டியல் உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொறுப்பினை ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சிகள் சஜித் பிரேமதாசவிடமே ஒப்படைந்திருந்த நிலையில் இன்றையதினம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப் பெற்ற 7 தேசிய பட்டியல் ஆசனங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் விபங்களை அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு நேற்று புதன்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க, இம்தியாஸ் பாகிர் மாகர், எரான் விக்கிரமரத்ன, ஹரின் பெர்னாண்டோ, மயந்த திஸாநாயக்க மற்றும் டயானா கமகே ஆகியோரது பெயர்கள் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் சர்ச்சை நிலவியது. அதில் அங்கத்துவம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் தமது கட்சிகளுக்கும் ஒவ்வொரு ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் வலியுறுத்திருந்த போதிலும் பின்னர் இறுதி தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பினை தலைமைத்துவத்திடமே ஒப்படைத்திருந்தன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைத் தவிர ஏனைய பிரதான கட்சிகளில் தேசிய பட்டியல் விவகாரம் இழுபறி நிலையில் காணப்பட்டது. எனினும் தற்போது பிரதான கட்சிகள் அனைத்தும் அதற்கு தீர்வு கண்டுள்ள போதிலும் எங்கள் மக்கள் சக்தி கட்சி மாத்திரம் இது வரையில் விபரத்தை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

Read:  இரண்டு கேஸ் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளன.
VIAவீரகேசரி பத்திரிகை (எம்.மனோசித்ரா)