இலங்கை அரசியலில் – காலம் போடும், கோலத்தை பார்த்தீர்களா?

ஜே.வி.பி முதன் முறைாயக 1994ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றிருந்தது.

நிகால் கலபதி அதன் முதலாவது உறுப்பினராகத் தெரிவானார். சந்திரிகா வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்த காலம் அது.

நிறைவேற்று ஜனாதிபதிமுறைய ஒழிப்பேன் என்று கூறிப் பதவிக்கு வந்த சந்திரிகாவுக்கு நிகால் கலபதி நாடாளுமன்றத்தில் ஆதரவும் கொடுத்திருந்தார்.

ஆனால் இந்த நாடாளுமன்றக் கட்டடம் ஐந்து நட்சத்திர விடுதியைப் போன்றது. மக்களின் வரிப்பணத்தில் 225 உறுப்பினர்களும் அதி உயர்வான உணவுகளை அருந்துவதாகக் குற்றம் சுமத்திய நிகால் கலபதி, நாடாளுமன்ற அமர்வுகளுக்கு வரும்போது. வீட்டில் இருந்தே சோற்றுப்பாசலையும் கொண்டு வருவார். உறுப்பினர்களுக்குரிய உணவகத்தில் வைத்து, வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை அவர் அருந்துவார்.

நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் எவரும் எந்தவொரு உணவுகளையும் கொண்டுவந்து அருந்த முடியாது. ஏனெனில் உறுப்பினர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறும். அவர்களின் நோய்களின் தன்மைக்கு ஏற்பவும் உணவுகளை கேட்டுப் பெற்றுக்கொள்ளக் கூடிய வசதிகள் அங்கு உண்டு.

இவ்வாறான நிலையிலும் ஜே.வி.பியின் கொள்கைக்கு அமைவாக, அன்று நிகால் கலபதிக்கு மாத்திரம் உள்ளே சோற்றுப் பாசலைக் கொண்டுவர சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது..

நாடாளுமன்றப் பதவிக்காலம் முடியும் வரை அவர் நாடாளுமன்ற உணவை அருந்தியதே கிடையாது. தேநீர்கூடக் குடிக்கவில்லை. உறுப்பினர்களுக்குரிய வரப்பிரசாதங்களைக் கூட நிகால் கலபதி அனுபவிக்கவில்லை. தற்போது நிகால் கலபதி எங்கே என்று தெரியாது. நேர்மையான மக்கள் பிரதிநிதி.

ஆனால் 2000ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை நாடாளுமன்றம் சென்று வரும் ஜே.வி.பி உறுப்பினர்கள் பலரும் நாடாளுமன்றத்திலேயே உணவை அருந்துகின்றனர். ஆனாலும் உறுப்பினர்களுக்குரிய வரப்பிரசாதங்களை மக்களுக்காகப் பயன்படுத்துகின்றனர்.

1982ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை ஜே.ஆர்.கட்டி முடித்துத் திறந்து வைத்தபோது, ஐந்து நட்சத்திர விடுதியனெக் குற்றம் சுமத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இன்று அந்த நாடாளுமன்றத்த்தின் வரப்பிரசாதங்களை முழுமையாக அனுபவித்து வருகின்றது. (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் நன்றாகவே அனுபவிக்கிறது)

ஆனால் எதிர்ப்புகளின் மத்தியில் அன்று அந்த நாடாளுமன்றத்தைக் கட்டிய ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று ஒரேயொரு ஆசனமே. அதுவும் தேசியப் பட்டியல் மூலமாகக் கிடைத்த ஆசனம் அது.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter