ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் பொது இணக்கப்பாடு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக யாரை நியமிப்பது என்பதில் இழுபறி நிலைமை காணப்பட்ட நிலையில் இது குறித்த இறுதி முடிவை எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடமே கொடுக்க  தேசிய மக்கள் சக்தியின் கூட்டணிக் கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக விவகாரங்களை பூதாகரமாக்க  வேண்டாம் என கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கூட்டணிக் கட்சிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட 47 ஆசனங்களுக்கு கிடைத்த ஏழு தேசிய பட்டியலுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் கூட்டணிக் கட்சிகள் இடையே மாற்றுக் கருத்துக்கள் நிலவியது. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிக் கட்சிகள் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஆரம்பத்தில் சிறுபான்மை கட்சிகள் தமக்கான இடத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஹெல உறுமைய போன்ற கட்சிகள் இடையில் மாற்றுக் கருத்துக்கள் நிலவிய போதிலும் இறுதியாக சகலரும் பொது இணக்கப்பாடு ஒன்றினை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீம் கூறுகையில், கட்சிக்குள் எந்தவித முரண்பாடுகளும் ஏற்படவில்லை. நிலைமைகளை தெளிவாக எடுத்துக் கூறிய நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியை பாதுகாக்கும் மற்றும் பலப்படுத்தும் விதத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக யாரை நியமிப்பது என்ற இறுதி முடிவை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்னெடுப்பார். எமக்கான நியாயமான  தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இது குறித்து கூறுகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் சகல கூட்டணிக் கட்சிகளும் தலைமைத்துவத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. அவ்வாறு இருக்கையில் தேசிய பட்டியல் குறித்த இறுதித் தீர்மானம் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எந்தவித முரண்பாடுகளும் இல்லாது இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றார்.

எவ்வாறு இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்துவதே தற்போதைய தேவையாக உள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள சஜித் பிரேமதாச கட்சியின் உள்ளக விவகாரங்களை பகிரங்கப்படுத்த வேண்டாம் எனவும், சுமூகமாக ஜனநாயக ரீதியில் பேசி சகல விடயங்களையும் தீர்ப்போம் எனவும் அவர் பங்காளிக்கட்சிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page