இனிமேல் அங்கீகாரமளிக்கப்பட்ட சிம் அட்டைகளுக்கே அனுமதி!

இனிவரும் காலங்களில் மக்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்கீககாரம் அளிக்கப்பட்ட நிறுவனங்களினால் வழங்கப்படும் சிம் அட்டைகள் உள்ளிட்ட தொடர்பாடல் சேவைகளையே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறல்லாத பட்சத்தில் அவர்களின் தொடர்பாடல் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்விடயம் குறித்துத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இனிவரும் காலத்தில் மக்கள் தமது தேவைகளுக்கென சிம் அட்டைகள் மூலமான தொடர்பாடல் வலையமைப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் போது, இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்கீகாரமளிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மாத்திரமே அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோன்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள முகவர் நிலையங்களிடமிருந்து மாத்திரம் தொடர்பாடல் சேவையினைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் கீழ் பதிவுசெய்யப்படாத தொடர்பாடல் வலையமைப்புக்களால் விநியோகிக்கப்படும் சிம் அட்டைகள் உள்ளிட்ட தொடர்பாடல் சேவையைப் பெறுவோருக்கு எதிர்வரும் காலத்தில் அச்சேவையைத் துண்டிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம். எனினும் ஏற்கனவே அத்தகைய சேவையைப் பயன்படுத்தி வருவோர் மீது இது எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


காலையிலேயே தங்க விலைகளை SMS ஆக பெற்றுக்கொள்ள, கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும். T&C*

* Get daily Srilanka gold rate to your mobile- Click above link & send the SMS – 2.5+tx/msg-Mobitel-2/day if balance available