வடக்கு, மேல் மாகாணங்கள் மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நாளை (26) காலை  6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வட மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி ஊரடங்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

ஆனால் மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் கலவரையறையின்றி நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுதல் மற்றும் மீண்டும் அமுல்படுத்தல் பின்வருமாறு மேற்கொள்ளப்படும்.

1.    கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மீண்டும் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும்.

2. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மார்ச்  27 வெள்ளிக்கிழமை முற்பகல் 6 மணிக்கு நீக்கப்பட்டு, அன்றைய தினம் நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

3. ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (26) வியாழன் முற்பகல் 6.00 மணிக்கு நீக்கப்பட்டு, அன்றைய தினம் நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணம்செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் எந்த மாவட்டங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும், சிறு தேயிலை தோட்ட, ஏற்றுமதி பயிர் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அவர்களது பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊடக சேவைக்காகவும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணிகளுக்காக விமான நிலையங்களுக்கும் துறைமுக சேவைகளையும் பேணுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅக்குறணை வர்த்தக சங்கத்தின் வேண்டுகோள்
Next articleமுகக்கவசத் தயாரிப்பில் ஈடுபடும் வாகன உற்பத்தி நிறுவனங்கள்