கண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது

கண்டி மாவட்டத்துக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் எங்கே என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிடம் கேள்வி எழுப்பியுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளருமான வேலுகுமார், கண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது எனவும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் வேலுகுமாரால் இன்று (10.08.2020) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கண்டி மாவட்டத்தில் வெற்றிபெறமுடியாது என தெரிந்தம், தமிழ் வாக்குகளை சிதறடித்து இருக்கின்ற தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் இல்லாதொழிக்கும் நோக்கில் வேட்பாளர் ஒருவரை போட்டியிட வைத்து பேரினவாதிகளின் சூழ்ச்சிகளுக்கு இ.தொ.கா. துணைநின்றது. ஆனாலும், இதில் எவ்வித தவறும் இல்லை என்பதுபோல் பிரச்சாரங்களின்போது நியாயம் கற்பிக்கப்பட்டது.

அதாவது கண்டி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கணிசமானளவு வாக்குகளைப்பெற்றால் நிச்சயம் தேசியப்பட்டியலொன்று கிடைக்கும், அதன் ஊடாக கண்டி மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என பிரச்சாரங்களின்போது கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இ.தொ.காவினால் முன்மொழியப்பட்ட இரண்டு பெயர்களில் கண்டி மாவட்டத்தின் சார்பில் துரை மதியுகராஜாவின் பெயர் முன்மொழியப்பட்டிருந்தது. இந்த உறுதிமொழியை நம்பி துரைமதியுகராஜாவுக்காக அவரின் ஆதரவாளர்கள் காங்கிரசுக்கு வாக்களித்தனர். இதனால்தான் போட்டியிட்ட வேட்பாளருக்கு கணிசமானளவு வாக்குகள் கிடைத்தன. ஆனால், உறுதியளித்தப்படி தேசியப்பட்டியல் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பொதுஜன பெரமுனவால் முன்வைக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் இ.தொ.கா. உறுப்பினர்களின் பெயர் இல்லை. அதனை பேரம் பேசி பெறுவதற்கான ஆற்றலும் அக்கட்சிக்கு இல்லை.

வெற்றி வாய்ப்பு இல்லை என தெரிந்தும் கண்டி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிப்பதற்கு துணைநின்றமை துரோகமாகும். தேசியப்பட்டியல் வழங்கப்படும் என்ற நம்பிக்கையை வழங்கிவிட்டு வாக்களித்த மக்களை ஏமாற்றியமை வரலாற்று துரோகமாகும்.

தேர்தல் காலத்தில் மட்டும் கண்டியில் முகாமிட்டு இருந்தவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர். நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களித்த மக்கள் நடுவீதியில் விடப்பட்டுள்ளனர். ஆனால், கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் தமிழ் பேசும் மக்களுக்கான குரலாய் ஒலிப்பேன்.” – என்றார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page