மணல் ஏற்றும் லொறிகள் எவ்வாறு அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடக்கப்பட்டன ? – சாணக்கியன் கேள்வி

நாட்டில் அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும் தற்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்பிற்கு வரும் வாகனங்களில் பெருமளவானவை மணல் ஏற்றும் லொறிகளாகும்.

அவை எவ்வாறு அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடக்கப்பட்டன என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை இராணுவத்தின் மூலம் இந்தத் தொற்றுநோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஜனாதிபதியும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் நம்பியதிலிருந்துதான் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தோல்வியடைய ஆரம்பித்தன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலுடனான நெருக்கடி நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பான குழுக்கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் என்பது தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு ‘அரசியல் கருவி’யாகப் பயன்படுத்தப்படுகின்றது.

நாட்டில் இந்தத் தொற்றுநோய் பரவத்தொடங்கியபோது, ‘போரை வெற்றிகொண்ட எமக்கு இதனைக் கையாள்வது பெரிய விடயமல்ல’ என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அதுவே தொடக்கப்புள்ளியாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து இந்த கொவிட் – 19 பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தவொரு தரப்பினருக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதாகவே இருந்துவருகின்றன.

இந்த சவாலை எதிர்கொள்வத்றகு ஆளுந்தரப்பினரால் முறையான கொள்கைகளும் செயற்திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை.

அதேபோன்று வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை எதிர்த்தரப்பும் மேற்கொள்ளவில்லை. அதேவேளை இதுவிடயத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் தலையீடு செய்வதற்கான இயலுமையும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது.

இக்காலப்பகுதியில் இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உதவக்கூடிய பல்வேறு புதிய நடவடிக்கைகளையும் திட்டங்களையும் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் இளைஞர், யுவதிகள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

ஆனால் இராணுவத்தின் மூலம் இந்தத் தொற்றுநோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஜனாதிபதியும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் நம்பியதிலிருந்துதான் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தோல்வியடைய ஆரம்பித்தன.

வைரஸ் பரவலை ஒருபோதும் துப்பாக்கியைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்த முடியாது. மாறாக அதற்கேற்றவாறான செயற்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக இந்த நெருக்கடிமிக்க காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பல்வேறு அடக்குமுறை செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஆரம்பத்திலிருந்தே பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளல், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான உணவுப்பொருள் வழங்கல், தடுப்பூசி வழங்கல் உள்ளடங்கலாக அனைத்து விடயங்களையும் அரசாங்கம் முறையாகத் திட்டமிடவோ, நிர்வகிக்கவோ இல்லை. இவ்வனைத்து விடயங்களிலும் அதிகளவான அரசியல் தலையீடுகளும் ஊழலுமே காணப்பட்டன.

நாட்டில் அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும் தற்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்பிற்கு வரும் வாகனங்களில் பெருமளவானவை மணல் ஏற்றும் லொறிகளாகும்.

அவை எவ்வாறு அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடக்கப்பட்டன என்பது புரியவில்லை. அதேபோன்று மணல் அகழும் பகுதியில் சுமார் நூற்றுக்கணக்கான லொறிகள் நிறுத்தப்பட்டிருப்பதுடன் அவை மணலை ஏற்றிக்கொண்டு நாட்டில் பலபாகங்களுக்கும் செல்கின்றன.

மேலும் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையை எடுத்துக்கொண்டால், நாட்டின் பெரும்பாலான மக்களைப் புறந்தள்ளும் நடவடிக்கையாகவே அதனைக் கருதமுடியும்.

வங்கிச்சேவை அத்தியாவசிய சேவையாக இருக்கும் நிலையிலும்கூட, மட்டக்களப்பு மாவட்டத்தில் வங்கி ஊழியர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கு மறுப்புத்தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவருக்கு நெருக்கமானவர்களுக்குத் தடுப்பூசியை வழங்குமாறு கடிதங்களைக் கொடுத்திருக்கிறார்.

அவ்வாறிருக்கையில் அதுகுறித்து ஆராயாமல் அத்தியவாசிய சேவையில் பணியாற்றுவோருக்கு தடுப்பூசியை வழங்க மறுப்புத்தெரிவிப்பது ஏன்? ஆகவே கொவிட் – 19 கட்டுப்பாட்டைப் பொறுத்தவரையில் அனைத்து விடயங்களிலும் அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது என்றே கூறவேண்டும். -வீரகேசரி பத்திரிகை- (நா.தனுஜா)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page