ரணில் வருகையினால் கலங்கும் சஜித் தரப்பு!

நாட்டில், அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத குறையை ரணில் விக்கிரமசிங்கவின் வருகை போக்கவுள்ளது. நாட்டின் முதற் பிரதமர் உட்பட பல பிரதமர்களையும், இரண்டு ஜனாதிபதிகளையும் ஆட்சியில் அமர்த்திய கட்சி இது. இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு ஆசனமும் இல்லாமல், தேசியப் பட்டியலில் கிடைத்த ஒரேயொரு ஆசனத்தை வைத்துக் கொண்டு, இறுதி மூச்சை விடுமளவுக்கு வீழ்ந்து கிடக்கிறது.

கடந்த வருடம் ஓகஸ்ட்17 இல் நடந்த பொதுத் தேர்தலில் இக்கட்சிக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு, ரணிலை ஒதுங்கி விடுமாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கைதான். கட்சிக்கு அதிக செல்வாக்கைத் தேடித் தந்தவரின் மகனுக்கு வழிவிடுமாறு மக்கள் வழங்கிய தீர்ப்பால், ஒரு கணம் நிலைகுலைந்து போன ரணில், எவ்வித தீர்மானத்துக்கும் வர முடியாமல் சுமார் ஒரு வருட த்தைக் கடத்தியும் விட்டார். இவருடனிருந்த சிலரது ‘ஜே.ஆரின் மேட்டுக்குடிச் சித்தாந்தம்தான்’, ஐக்கிய தேசியக் கட்சியை இப்படிக் கேவலப்படுத்தி உள்ளதாக சிலர் சிந்திக்கின்றனர்.

இதிலிருந்த இளந் தலைவர், 2019 ஜனாதிபதித் தேர்தலில் விட்டுக் கொடுத்திருந்தால், ‘ஐக்கிய மக்கள் சக்தி’ என்ற கட்சியும் தோன்றியிருக்காது. இது, தோன்றியதால்தானே ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்தளவு வீழ்ச்சி! ரணில் விசுவாசிகளின் விவாதம் இது. நல்லாட்சி அரசின் பிரதான பங்காளியாக ஐ.தே.க இருந்த காலத்திலிருந்து, இந்தக் கீறல்கள், இடைவெளிகள் ஏற்படத் தொடங்கியதை மக்களும் அவதானித்து வந்தனர்.

எதிர்வரும் தேர்தல்களில், எதிர்க் கட்சி எழுச்சி பெறாதிருக்கவும், ஆளும் கட்சிக்குள் உள்ள அதிருப்திகள் பலம் பெறாதிருக்கவும் இப்போது சந்தர்ப்பம் உருவாகி வருவதைக் காண முடிகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியை நிலைதளருவதற்கான சந்தர்ப்பமும் காணப்படுகின்றது. இவையெல்லாம் ரணிலின் வருகையினால் உருவாகக் கூடுமென்பதே அரசியல் அவதானிகளின் கணிப்பு.   எதிர்க் கட்சியை உடைக்க முடியாதெனச் சிலரும், எதிர்க் கட்சித் தலைவராகிறார் ரணில் எனச் சிலரும் கூறுகின்ற ஆரூடங்கள் ஊடாக இவ்வாறுதான் கணிக்க முடிகின்றது.

Read:  வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு, வாகன இறக்குமதி அனுமதி

நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முற்படும் பிரேமதாசவின் குடும்பத்துக்கு, ஜே.ஆ ரின் மேட்டுக்குடிச் சிந்தனைவாதம் முட்டுக்கட்டையாகத்தான் இருக்கப் போகிறது.  ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள சிறுபான்மைத் தலைமைகளை நம்பிக் கொண்டு காலத்தை எத்தனை நாட்களுக்கு ஓட்டுவது? தென்னிலங்கை வாசலுக்குள் நுழைந்து எதையாவாது தேடுவோம் என்றிருந்த சஜித்துக்கு, எதிர்வரும் 22 ஆம் திகதி எரிச்சலுக்குரிய நாள்தான்.

ரணில் தவிர, இக்கட்சியிலிருந்து வேறு எவர் பாராளுமன்றம் வந்தாலும் ஒரு பொருட்டே இல்லை. ஆனால், வரப் போவது இரண்டு தேர்தல்களிலும் இடைஞ்சல் தந்தவராயிற்றே!

இது மட்டுமா, மக்களுக்காகத்தான் பாராளுமன்றம் வரப் போவதாகவும் இவர் கூறுகிறாரே! அவ்வாறு வந்தால், 1977 ஆம் ஆண்டு தொடக்கம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு எம்.பி யென்ற சாதனையையும் ரணில் பெற்று விடுவார்.
எனினும் இவர் வருவதால், இனி வரவுள்ள பிரச்சினைகள் சஜித்துக்கு மட்டுமில்லை!

இரு தரப்பிலும் பங்காளிக் கட்சிகளாக உள்ள சிறுபான்மைத் தலைமைகளின் சிதறல்களும் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தவே செய்யும். இந்த நெருக்கடிகள், சிறுபான்மைத் தலைமைகளின் ஆளுமைகளையும் ஆட்டம் காணச் செய்யும்.   இருபதாவது திருத்தம், இரட்டைப் பிரஜாவுரிமை மேலும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலங்களின் வாக்களிப்புகளில் எம்.பிக்களின் தீர்மானங்கள் போன்றன இக்கட்சிகளின் ஆளுமை ஆணிவேர்களை உசுப்பியும் பார்த்திருக்கின்றன. சுஐப் எம்.காசிம்தினகரன்