மரண தண்டனை கைதி பிரேமலாலுக்கு பதவியேற்க சந்தர்ப்பம்

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது நபரொருவரை சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

2020 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 196 உறுப்பினர்களது பெயர்களை உள்ளடக்கி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலில் பிரேமலால் ஜயசேகரவினுடைய பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கமைய அவருக்கு பதவியேற்றுக் கொள்வதற்கான வாய்ப்பளிக்கப்படும் என்றும் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இரத்தினபுரி  மாவட்ட வேட்பாளராகக் களமிறங்கி ஒரு இலட்சத்து 4237 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள பிரேமலால் ஜயசேகரவிற்கு 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது காவத்தை பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார கூட்டத்தில் நபரொருவரை சுட்டுக் கொண்ட குற்றத்திற்காக இரத்தினபுரி  மேல்நீதிமன்றத்தினால் ஜூலை 31 ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிறைவடைந்துள்ள பாராளுமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டாவதாக அதிகூடிய வாக்குகளைப் பெற்று பிரேமலால் ஜயசேகர வெற்றி பெற்றுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்க முடியுமா என்பது தொடர்பில் வினவிய போதே பாராளுமன்ற செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,

பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமைக்கு அவரால் மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே மேல் நீதிமன்றத்தினால் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னரே எம்மால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள 196 உறுப்பினர்களது பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரேமலால் ஜயசேகரவினுடைய பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அந்த விஷேட வர்த்தமானிக்கமையவே எம்மால் பாராளுமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அதற்கமைய அவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். மேன்முறையீட்டு மனு தொடர்பான இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை அவரது பாராளுமன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட வேண்டும். தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் அதற்கேற்ப உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

SOURCE(எம்.மனோசித்ரா) வீரகேசரி பத்திரிகை