டெல்டா வகை கொவிட் தொற்று; ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவும் அபாயம்!

இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இயக்குநர் ஹன்ஸ் குளூஜ் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்த தயாராகிவரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா தீநுண்மியானது, தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என்பதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்கள், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

கடந்த ஆண்டு இலையுதிர் மற்றும் குளிர் காலமானது அதிக பொது முடக்கங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்தது. மீண்டும் அந்தத் தவறை நாம் செய்யக் கூடாது. பொதுமக்கள் மிக அத்தியாவசியமான காரணமின்றி பயணம் செய்யக் கூடாது.

ஐரோப்பா கண்டம் முழுவதும் தடுப்பூசி திட்டங்கள் மற்றும் பிற பொது சுகாதார திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்’ என கூறினார். -Thinakaran-