18M$ செலவிட்டு, 227 சொகுசு வாகனங்கள்; படுமோசமான செயல் – JVP சாடல்

நாட்டில்  கொவிட்  தொற்றின்  காரணமாக  மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் 18 மில்லியன் டொலர் செலவிட்டு 227 சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளது. இந்த பணத்தை கொவிட் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கு உபயோகித்தால் நாட்டிலுள்ள பெருமளவான மக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கம் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தத்திற்கு அமையவே இந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டவுள்ளன. இந்த திட்டத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் , நாட்டில் பாரிய கடன் சுமை காணப்படுகிறது. அவற்றை செலுத்துவதற்காக காணப்படும் டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி வாகன இறக்குமதியை அரசாங்கம் இரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து வாகன  உதிரிப்பாகங்கள் மற்றும் மஞ்சள் உள்ளிட்டவற்றுக்கும் இறக்குமதி தடை விதிக்கப்பட்டது.

ஆனால், இவ்வாறான நிலையிலும் 18 மில்லியன் டொலர் செலவிட்டு 227 சொகுசு ஜீப் வாகனங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளது. பொருளாதாரத்தில் மாத்திரமின்றி கொவிட் தொற்றின் காரணமாகவும் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்திலேயே அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக உபயோகிக்கும் இந்த 18 மில்லியன் டொலர்களின் மூலம் 36 இலட்சம் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய முடியும். அவ்வாறில்லை எனில் 18 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளையேனும் கொள்வனவு செய்யலாம். இதன் மூலம் கொவிட் தொற்றிலிருந்து மக்களை உயிரை பாதுகாக்க முடியும்.

அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை முதற்கட்டமாக பெற்றுக் கொண்ட 6 இலட்சம் பேர் தற்போது இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான தேவை என்ன? இவ்வாறான தலைவர்களால் எவ்வாறு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கம் செய்து கொண்டுள்ள இரகசிய ஒப்பந்தத்தின் பிரகாரமே இவை கொள்வனவு செய்யப்படுகின்றன. இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ள ஒரு வாகனத்தின் பெறுமதி 50 இலட்சமாகும். இவற்றில் ஒரு வாகனத்தையேனும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தமாட்டார்கள். இந்த செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

-வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter