கொவிட் மரணங்களின் வீதம் அதிகரிக்கின்றது – இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை 

கடந்த ஒரு மாதகாலத்தில் நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 28 வீதத்தால் அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. எனவே நாட்டின் நிலைமைகளை சாதாரணமாக கருத்தில் கொண்டு நாட்டை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டாம் என  இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன எச்சரிக்கை விடுக்கின்றார்.

தற்போதுள்ள கொவிட் வைரஸ் பரவல் நெருக்கடி நிலைமைகள் குறித்தும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் பரவல் கட்டுப்பாடுகள் குறித்த இறுதியாக கிடைக்கப்பெற்ற தரவுகளை அவதானிக்கும் போது  நாடு ஆரோக்கியமான மட்டத்தில் இல்லை, தொடர்ந்தும் வைரஸ் பரவல் நிலைமைகள் மோசமானதாகவே உள்ளது.

இம்மாதம் 7 ஆம் திகதியில் இருந்து ஒரு மாதகால தரவுகளை பார்த்தல் வைரஸ் தொற்று பரவல் வீதமானது அதிகரித்துள்ளது.

எனினும் இதனை நாம் சமூக பரவல் என்ற வார்த்தையால் அடையாளப்படுத்த மாட்டோம். பரவல் நான்காம் கட்டமாக மாறியுள்ளதாக கூற அதற்கான தொழிநுட்ப செயற்பாடுகளை உறுதிப்படுத்தவும் வேண்டும்.

ஆனால் மரணங்களின் வீதம் அதிகரித்து செல்கின்றது. இப்போதே மரணங்கள் 28 வீதத்தால் அதிகரித்துள்ளன. இது மிக மோசமான நிலை என்பதை சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாளாந்தம் மூவாயிரம் பேர் அடையாளம் காணப்படுகின்றனர் என்றால் அவர்களை சார்ந்த பத்தாயிரம் பேர் சமூகத்தில் இருக்கலாம். அவர்களை நாம் அடையலாம் காணமுடியாது.

எனவேதான் இந்த நிலைமை மோசமானது என்பது தொடரச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதுமட்டும் அல்ல, கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமைகள் குறித்த முழுமையான தரவுகள் அரசாங்கத்தினால் சேகரிக்கப்படுகின்றதா அல்லது அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் எந்த தரவுகளை கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது என்பது தெரியவில்லை.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

அரசாங்கம் வழங்கும் தரவுகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. ஆகவே அந்த தரவுகளுக்கு அமைய தீர்மானம் எடுக்கையில் சகல தீர்மானங்களும் பிழைத்துப்போகும்.

மேலும் பயணக்கட்டுப்பாடு காலத்தில் அரசாங்கம் முழுமையாக கட்டுப்பாடுகளை விதிக்காதது ஏன் என்ற கேள்வியும் எம்மத்தியில் உள்ளது.

கடந்த பத்து நாட்களாக அவதானித்தால் கொழும்பிற்கு வரும் வாகனங்களை பார்த்தால் அரசாங்கம் தமது செயற்பாடுகளை சரியாக செய்யவில்லை என்பது வெளிப்படுகின்றது.

ஆகவே ஒரு சில துறைகளில் அரசாங்கம் விடும் தவறுகளை நிவர்த்திசெய்ய வேண்டும் என்பதை நாமும் வலியுறுத்தியுள்ளோம். அதேபோல் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டதிலும், பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் வேலைத்திட்டத்திலும் சில மாற்றங்களை அரசாங்கம் கையாண்டாக வேண்டும் எனவும் அவர் கூறினார். (ஆர்.யசி) -வீரகேசரி பத்திரிகை-