கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு 11 ஸ்டிக்கர்கள்: முழு விபரங்கள் இதோ!

பயணத்தடை நிலவும் காலப்பகுதியில், அத்தியாவசிய சேவை நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக பயணிப்போர் எந்த தாமதமும் இன்றி தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்காக உரிய முறைமை ஒன்றினை அமுல் செய்வதன் அவசியத்தை கருதி இந்த புதிய ஸ்டிக்கர் முறைமை அமுல் செய்யப்படுகிறது.

பல சோதனை சாவடிகளில் ஒரே வாகனம் சோதனைச் செய்யப்படுவதை  இந்த புதிய முறைமை தவிர்க்கும்.  இன்று 7 ஆம் திகதி காலை 6.30 மணி முதல் கொழும்புக்குள் உள் நுழையும் அனைத்து பாதைகளிலும் இந்த ஸ்டிக்கர் ஒட்டும் புதிய முறைமை அமுல்செய்யப்படும்.

இதற்காக 11 வகையான ஸ்டிக்கர்களை நாம் தயாரித்துள்ளோம்.

ஒவ்வொரு நிறத்தினால் ஒவ்வொரு சேவைகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. என அஜித் ரோஹன கூறினார்.

 பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் தகவல் பிரகாரம் நிறங்களும் அடையாளப்படுத்தப்படும் சேவைகளும் வருமாறு:

பச்சை நிறம்: சுகாதார சேவைகளில் ஈடுபடுவோர்

இளம் நீலம்: முப்படையினர், பொலிஸார்

ஊதா நிறம் :  தனியார் துறைக்கு சொந்தமான அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் ( வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்)

இளம் மண்ணிறம்:  ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி, தொழிற்சாலைகளுடன் தொடர்புப்பட்டவர்கள்

மஞ்சள்: அத்தியாவசிய விநியோகம் தொடர்பில்

சிவப்பு: அத்தியாவசிய பகிர்ந்தளிப்புகள்

செம்மஞ்சள் : ஊடகம் மற்றும் தொடர்பாடல் சேவைகள்

வெள்ளை:  வெளிநாட்டுக்கு செல்லல் தொடர்பிலான விடயங்களுக்காக (விமான நிலையம் செல்லல், அங்கிருந்து திரும்புதல்)

 கறுப்பு:  மனிதாபிமான காரணங்களுக்காக ( மரணங்கள், வைத்திய பரிசோதனைகள், மருந்து எடுப்பதற்காக செல்லுதல் போன்றன)

சாம்பள் நிறம்: சமைத்த உணவு மற்றும் டிலிவரி சேவைகளுக்காக

ரோஸ் நிறம் : அரச சேவையின் ஏனைய நடவடிக்கைகளுக்காக

 இந்த நிற வகைப்படுத்தல் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவிக்கையில்,

‘ நீங்கள் மோட்டாச் சைக்கிள் ஒன்றில் வருகை தந்தால், குறித்த ஸ்டிக்கரை ஒட்டிய பின்னர் நாம் அதில் ஒருவர் அல்லது நீங்கள் இருவர் பயணித்தால் இருவர் என நாம் குறிப்பிடுவோம்.  ஏனைய வாகங்களிலும் பயணிப்போரின் எண்ணிக்கையை கருதி அதில் குறிப்புகள் இடப்படும்.  பயணக் கட்டுப்பாடு முடிவடையும் வரை இது செல்லுபடியாகும்.

 ஒரு வாகனத்தில் 5 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என ஸ்டிக்கரில் குறிப்பிடப்பட்டிருந்தால் அதில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பின்னர் 6 பேர் பயணிக்க முடியாது. இந்த ஸ்டிக்கர், சேவை அடையாள அட்டை, சேவை நிறுவன கடிதம், தேசிய அடையாள அட்டை ஆகியன  பரீட்சிக்கப்பட்ட பின்னரேயே ஒட்டப்படும். எனவே  இன்று(07.06.2021) கொழும்புக்குள் உள் நுழையும் போது வாகன நெரிசல் காணப்படும். எனினும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பின்னர், நாளை, நாளை மறுதினம் போன்ற நாட்களில் அவர்களால் எந்த இடையூறும் இன்றி பயணிக்க முடியும். ஸ்டிக்கர் ஒட்டப்படும் போது குறித்த வாகனங்களில் உள்ளவர்கள் தவிற வேறு யாரும்  பயணக் கட்டுப்பாடு நிலவும் ஏனைய நாட்களில் அவ்வாகனத்தில் பயனிக்க முடியாது.

 நாளை நீங்கள் பாதைகளில் பயணிக்கும் போது உங்களுக்கு வழங்கப்படும்  ஆலோசனைகளுக்கு அமைய செயற்படவும்.’ என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இதன்போது நிறுவனங்களில் ஊழியர்களை, பணிக் குழுவினரை அழைத்துச் செல்லும் பணிகளில் ஈடுபடும் வாகங்களில், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நபர்கள் பயணிப்பர் என்பதை சுட்டிக்காட்டிய  ஊடகவியலாளர்கள், அவ்வாறான வாகனங்களுக்கு என்ன மாற்றுவழி என  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹனவிடம் வினவினர்.

 அதற்கு பதிலளித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, ஸ்டிக்கர் ஒட்டப்படும் போது அவ்வாறான வாகனங்களின் சாரதிகள், குறித்த விடயத்தை அந்த பொலிஸ் அதிகாரியிடம் கூற வேண்டும் எனவும் அப்போது அவர்கள் விஷேட குறிப்பொன்றினை இடுவர் எனவும் தெரிவித்ததுடன் அவ்வாறு தெரிவிக்க வேண்டியது சாரதியின் கடமை எனவும் குறிப்பிட்டார். -வீரகேசரி பத்திரிகை- (எம்.எப்.எம்.பஸீர்)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page