இமாம், முஅத்தின்களுக்கு 5000 ரூபா நிவாரணம் முஸ்லிம் சமய திணைக்களம் தெரிவிப்பு

நாடளாவிய ரீதியில் பள்ளிவாசல்களில் கடமையாற்றும் இமாம்கள் மற்றும் முஅத்தின்கள் கொவிட் 19 நிலைமை காரணமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணம் பெறத் தகுதியுடையவர்கள் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி. எம். அஷ்ரப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘புத்தசாசன மற்றும் சமய கலாசார விவகாரங்கள் அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின்படி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன சமூர்த்தி ஆணையாளர் நாயகத்துக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார். அக்கடிதத்தின்படி பள்ளிவாசல்களில் கடமையாற்றும் இமாம்கள் மற்றும் முஅத்தின்மார் இந்த 5000 ரூபா நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

நிவாரணம் குடும்பங்களுக்கே வழங்கப்படுவதால் குடும்பம் வசிக்கும் பகுதியில் பெற்றுக் கொள்ளலாம். திருமணம் முடிக்காதவர்கள் தமது பெற்றோருடன் வாழாது தனியாக வாழ்ந்தால் அதனை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் இந்நிவாரணத்துக்கு தகுதியாகலாம். பிள்ளைகள் மற்றும் திருமணம்முடித்த மனைவியை இழந்து தனியாக வாழ்வோரும் இந்நிவாரணத்துக்கு தகுதியானவர்கள். எனவே சம்பந்தப்பட்டவர்கள் அவ்வப் பகுதி அதிகாரிகளின் வழிகாட்டலைப் பேணி நடந்து கொள்ளவும்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு இவ்விடயத்தில் எந்த அதிகாரமும் இல்லை. கடந்த மே மாதம் 31ஆம் திகதிய சுற்று நிருபத்தின் பிரகாரம் ஏற்கனவே 5000 ரூபா நிவாரணம் பெற்றுக் கொண்டவர்கள் மீண்டும் ஒரு முறை இந்த நிவாரணத்தைப் பெற முடியாது. எனினும் பிரச்சினைகள் இருந்தால் அவற்றை ஆராய்ந்து வழிகாட்டவும் இயன்ற உதவிகளைச் செய்யவும் திணைக்களம் தயாராக உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கடந்த 2021.06.01 ஆம் திகதி சமுர்த்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

‘நாட்டில் நிலவும் கொவிட் 19 நிலைமை காரணமாக நாடெங்குமுள்ள இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத தலங்களில் கடமையாற்றும் குருமார்கள் தங்களது வருமானத்தை இழந்துள்ளனர். இந்தக் குடும்பங்களின் ஒரு தொகை தற்போது சமுர்த்தி கொடுப்பனவு பெற்று வருகின்றன. அவ்வாறு சமூர்த்தி பெற்றுக்கொள்ளாத குடும்பங்களுக்கு கொவிட் 19 நிவாரணம் 5000 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் என குறிப்பிடப்பட்டுள்ளது, (ஏ.ஆர்.ஏ.பரீல்)

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter